ஆதார் அவகாசம் மார்ச் 31 வரை நீடிப்பு: மத்தியஅரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 08:02


புதுடில்லி:

  மத்திய அரசின் திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2018 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 உடன் முடிவடைவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதை எதிர்த்தும், ஆதார் இணைப்பிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால்,  மத்திய அரசின் 139 சேவை மற்றும் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. இந்த அவகாசத்தை நீட்டிக்க  அரசு முடிவு செய்துள்ளது.  2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொபைல்போன்களுடன் ஆதார்எண் இணைப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 6 என்பதில் மாற்றம் இல்லை. என்று தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியாம்திவான்,  பல்வேறு சேவைகளுக்கு ஆதார் எண் இணைக்காதவர்கள் மீது கெடுபிடி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றார்.  ஆதார் கார்டுஇல்லாதவர்கள் மீது எந்தவித கெடுபிடி நடவடிக்கைகளும் எடுக்கப்படாது. அவர்கள் ஆதார் அட்டைக்காக பதிவு செய்ய வேண்டு்ம். ஆதார் கார்டு இல்லை என்பதற்காக மார்ச் 31ம் தேதி வரை சமூக நல திட்டங்களின் பயன்கள் மறுக்கப்படக்கூடாது என்றும் அவர்உறுதி அளித்தார்.

கால அவகாசம் நீடிப்பது பற்றிய அறிவிப்பு முறைப்படி வெள்ளியன்று (இன்று ) வெளியிடப்படும் என தெரிகிறது.  இதற்கிடையில் இந்த வழக்கு பற்றி விசாரிக்க  ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சை சுப்ரீம்கோர்ட் நியமிக்க முன் வந்துள்ளது.

இதற்கிடையில் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயம் தான்.. அதற்கு எந்தவித தடையையும் சுப்ரீம்கோர்ட் இதுவரை விதிக்கவில்லை என்று  இந்திய தனித்தன்மை  அடையாள அதிகார அமைப்பு கூறி உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெற ஆதார் தேவை என்று வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும்,(வங்கி கணக்கு,பான்கார்டு, சிம்கார்டுடன் ஆதார் இணைப்பு) சட்டப்படி செல்லத்தக்கது தான். சுப்ரீம் கோர்ட்டில் டிசம்பர் 7ம் தேதியும் எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. என்று ஆதார் அமைப்பு அறிக்கையில்  கூறி உள்ளது.