டிப்பர் லாரி மீது மோதி விபத்து: லேசான காயத்துடன் உயிர் தப்பினார் திரைப்பட இயக்குநர் கவுதம்வாசுதேவ் மேனன்

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 07:49


சென்னை:

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், திரைப்பட இயக்குநர் கவுதம்வாசுதேவ் மேனன் ஓட்டிச் சென்ற கார், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கவுதம்வாசுதேவ் மேனன். நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரத்தில் இருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். செம்மஞ்சேரி அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் வேகமாக வந்த போது அவரது கார் முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி திடீரென மீது மோதி நின்றது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் பலத்த சேதமானது. இதில் கவுதம்வாசுதேவ் மேனனின் கையில் ரத்தகாயம் ஏற்பட்டது. லாரியின் பின்பகுதியும் சேதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். காயம் அடைந்த இயக்குனர் கவுதம்வாசுதேவ் மேனனை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து டிப்பர் லாரியையும், இயக்குநரின் சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிகிச்சைக்குப்பின்னர் கவுதம்வாசுதேவ் மேனன் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்து  போலீசாரிடம் விளக்கம் அளித்து விட்டு சொகுசு காரை எடுத்து சென்றார். டிப்பர்லாரி ஓட்டுனரான படப்பையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்குநர் கவுதம் வாசுதேவ்மேனன் கார் விபத்தில் சிக்கியது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. போலீசார் காரை பறிமுதல் செய்து போக்குவரத்து துறைக்கு அனுப்பி ஆய்வு செய்து, முறையாக விசாரிக்காமல் கவுதம் மேனன் எப்படி காரை எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விபத்து நிகழ்ந்தவுடன் காரை ஓட்டி வந்த கவுதம்வாசுதேவ் மேனன் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து போலீசார் கருவி மூலம் சோதனை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால்விபத்துக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை என்பதால் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.