மும்பையில் கைதான தஸ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட்டம்

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 07:46


சென்னை:

மும்பையில் கைதான தஸ்வந்த் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  விமான நிலைய கழிவறைக்கு சென்றவன் கைவிலங்குடன் மாயமானான்.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த தஸ்வந்த். கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தன் தாய் சூதாட பணம் தராததால் ஆத்திரம் அடைந்து இரும்புக் கம்பியால் தாய் சரளாவை அடித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டான். கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்த அவனைப் பிடிக்க அம்பத்துார் துணைக்கமிஷனர் பர்வேஸ்ராஜ் மேற்பார்வையிலான 5 தனிப்படை போலீசார் பிடிக்க வியூகம் வகுத்தனர். இந்நிலையில் தஸ்வந்த் தனது நண்பர் ராஜ்குமார் தாமஸ் என்ற விபசார புரோக்கர் மூலம் மும்பையில் உள்ள விபசார அழகி வீட்டில் தஞ்சம் புகுந்தான். இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் மும்பைக்கு சென்றனர்.

அங்கு தார்டியா போலீஸ் எல்லையில் உள்ள செப்பூர் என்ற இடத்தில் வைத்து தஸ்வந்தை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அங்கு குதிரை ரேஸ் ஆட வந்த போது போலீசார் கையில் தஸ்வந்த் சிக்கினான். அவனை தார்டியா கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லுங்கள் என மும்பை போலீசார் கூறியதன் பேரில் போலீசார் நேற்று காலையில் மும்பையில் உள்ள கோர்ட்டில் அவனை ஆஜர்படுத்தினர். அங்கு அவனுக்கு கோர்ட் டிரான்ஸ்சிட் வாரண்டு அளித்தனர். மேலும் வரும் சனிக்கிழமைக்குள் தஸ்வந்தை சென்னைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை தனிப்படை போலீசார் தஸ்வந்தை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அவனது கையில் விலங்கு மாட்டி தகுந்த பாதுகாப்புடன் மும்பை விமான நிலையத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு வந்தனர். விமான நிலைய வளாகத்துக்குள் உள்ள ‘சேட்டலைட்’ என்ற ஓட்டலில் போலீசார் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்ததும் தஸ்வந்த் தனக்கு வயிறு வலிப்பதாகவும், அவசரமாக கழிவறைக்கு செல்ல வேண்டும் என போலீசாரிடம்  கேட்டுள்ளான். அதற்கு போலீசார் மறுத்துள்ளனர். பின்னர் அவன் கெஞ்சி கேட்டதன் பேரில் ஒரு பக்க கைவிலங்கை மட்டும் போலீசார் அவிழ்த்து விட்டு கழிவறைக்குள் செல்ல அனுமதித்துள்ளனர். ஆனால் அவன் கழிவறைக்குள் செல்லாமல் திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடி விட்டதாக போலீசார் சார்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விமான நிலையம் அமைந்துள்ள மும்பை பிலாஸ்பூர் போலீஸ் நிலையத்தில் சென்னை போலீசார் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து தஸ்வந்தை பிடிக்க மும்பை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

என்கவுன்டருக்கு திட்டமா?

5 நாட்களாக சென்னை போலீசாருக்கு தண்ணி காட்டிய தஸ்வந்த்தை மிகவும் சிரமப்பட்டு மும்பை சென்று போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்த நிலையில் அவன் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடியது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஸ்வந்த் 8 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தலையணையால் அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளான். அதோடு விடாமல் சிறுமியின் உடலை எடுத்துச் சென்று தாம்பரம் பைபாஸ் சாலையில் ஒதுக்குப்புறமாக வைத்து எரித்துள்ளான். பின்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த பிறகும் தான் செய்த தவற்றை எண்ணி மனம் வருந்த வில்லை. மீண்டும் தன் தாயை அடித்துக் கொலை செய்து சைக்கோத்தனமாக நடந்து கொண்டுள்ளான். மேலும் பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வரும் தஸ்வந்தின் தந்தை சேகர் கோர்ட்டில் தனது மகனை மனநல மருத்துவரிடம் சிகிச்சை அளித்து திருத்த முயற்சிக்காமல் பண பலத்தை வைத்து அவனை குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தார். இப்போது அவரது மனைவியை கொடூரமாக தலையில் தாக்கி கொலை செய்தபிறகும் அதே பிடிவாதத்தில் என் மகன் என் மகன் என போலீசாரிடம் புலம்பித் தள்ளியதாக தெரிகிறது. இதனால் போலீசார் தஸ்வந்த் விஷயத்தில் ஒரு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவனை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மேலும் மேலும் அவனது வக்கிர கொலைகார புத்தி மேலும் வளரத்தான் செய்யும் என கருதுகிறார்களாம். அதனால் தஸ்வந்தை தப்பிக்க விடுவது போல் விட்டு அவனை என்கவுன்டரில் போட்டுத்தள்ள போலீசார் முடிவவெடுத்துள்ளார்களா எனவும் போலீஸ் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.