ஐநா தூதர் வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 08 டிசம்பர் 2017 04:07

பியாங்கியாங்:

ஐக்கிய நாடுகள் சபையின் உயரதிகாரியான ஜெஃப்ரி ஃபெல்ட்மென் இன்று வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரியோங் ஹோவை சந்திப்புப் பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி ஃபெல்ட்மென் 4 நாள் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். முதல் நாளான நேற்று வடகொரியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் பாக் மியாங்கை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரியோங் ஹோவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது என்னவெல்லாம் பேசப்பட்டது என்பது தெளிவாக தெரியவரவில்லை. நேற்று நடந்த துணை வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில்,

”வடகொரியாவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மற்றும் இங்கு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது” என வடகொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வடகொரியா மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியது. பரபரப்பான இந்த சூழலில் ஐநாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன், அமைதி தூதரக வடகொரியாவிற்கு சென்றுள்ளார். இந்த பயணம் உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.