ஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 22:54

சென்னை,

அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் ஆந்திரா - ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன்,
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் மசூலிப்பட்டினத்தில் இருந்து 875 கி.மீ. தொலைவில் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 10–ம்தேதி வாக்கில் வடக்கு ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

இதனால், வடதமிழகம் மற்றும் ஆந்திர மீனவர்கள் வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

டிசம்பர் 8, 9ம் தேதிகளில் ஆந்திரா, ஒரிஸா, வங்க கடலின் ஆழ்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது.

நெல்லையில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.