பணம் வாங்கிக் கொண்டு கேள்வி எழுப்பியதாக 11 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 22:35

புதுடில்லி:

தனியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி பதில்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 11 முன்னாள் எம்பிக்கள் மீது டில்லி நீதிமன்றத்திள் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை சில எம்.பி.க்கள் தாக்கல் செய்துவிடுகிறார்கள் என்பதை இரண்டு பத்திரிகையாளர்கள் நேரடி ஆய்வு, காமிராவில் படம்பிடித்து சாட்சியங்களை தயாரித்தனர். இந்த ஆய்வுகள் 2005ஆம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி தனியார் தொலைக்காட்சி அலைவரிசையில் செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

இரண்டு பத்திரிகையாளர்கள் தங்கள் செய்திக்கு ஆதாரமாக திரட்டிய பேட்டிகள், ஒளிபரப்பான எம்.பி.க்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.களும் அவர்களது கட்சிகளும்

1. ஓய்.ஜி. மகாஜன் – பாஜக (மக்களவை)

2. சந்திர பால் சிங் லோத்தா – பாஜக (மாநிலங்களவை)

3. அன்னா சாகேப் எம்.கே. பாட்டீல் - பாஜக (மக்களவை)

4 .பிரதீப் காந்தி - பாஜக (மக்களவை)

5. சுரேஷ் சந்தெல் - பாஜக (மக்களவை)

6. சந்திர பிரதாப் சிங் பாஜக (மக்களவை)

7. ராம் சேவக் சிங் – காங். (மக்களவை)

8. மனோஜ் குமார் - ஆர்ஜேடி (மக்களவை)

9. நரேந்திர குமார் குஷ்வாஹா – பிஎஸ்பி (மக்களவை)

10. லால் சந்திரகோல் - பிஎஸ்பி (மக்களவை)

11. ராஜா ராம்பால் பிஎஸ்பி (மக்களவை)

கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிகை எம்பிக்களை வலையில் சிக்கவைத்தது.

கேள்வி எழுப்ப எம்.பி.க்கள் பணம் வாங்கும் காட்சி விடியோவாக படம் பிடிக்கப்பட்டது.

இந்த காட்சி செய்தியாக ஒளிபரப்பப்பட்டது.

11 எம்.பி.க்கள் மீதான புகார்கள் நாடாளுமன்ற நீதியியல் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அககமிட்டி இந்த எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று பரிந்துரை செய்தது. அதன் பேரில் அப்பொழுது மக்களவை அவைத் தலைவராக இருந்த சோமநாத் சாட்டர்ஜி அவர்கள் 11 பேரையும் அவையிலிருந்து வெளியேற்றும் உத்தரவைப் பிறப்பித்தார்.

அந்த 11 பேரில் பிஎஸ்பி கட்சியைச் சேர்ந்த ராஜா ராம்பால் 2009இல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மற்ற 10 பேரும் மீண்டும் அவைக்கு வரவில்லை.

இதற்கிடையில் டில்லி உயர்நீதிமன்றம் 11 எம்.பி.க்கள்மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.

ராஜாராம் பால் மீது வழக்குப் பதிவு செய்ய  அப்பொழுது அவைத் தலைவராக இருந்த மீராகுமாரின் அனுமதி வழங்கினார்.

2009ஆம் ஆண்டு ஜூன்மாதத்தில் 11 எம்.பி.க்கள் அவர்களுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்த இடைத்தரகர்கள் 2 பேர் மீது டில்லி உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதற்கிடையில் தங்களை அவையிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்து 10 மக்களவை உறுப்பினர்களும் 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களை அவையைவிட்டு நீக்கியது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த மேல்முறையீட்டு மனுக்களை 5 நீதிபதிகளைக்கொண்ட அமர்வு நிராகரித்துவிட்டது. அமர்வின் தலைவராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பெரும்பான்மை தீர்ப்பை வழங்கினார்.

அதனடிப்படையில் டில்லி நீதிமன்ற சிறப்பு நீதிபதி கிரண் பன்சால் 11 எம்.பி.க்கள்மீது குற்றங்கள் பதிவு செய்தார். ஜனவரி 12ந் தேதி வழக்கு விசாரணை தொடங்கும் என அறிவித்தார்.