நேபாளத்தில் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 19:41

காத்மண்டு

நேபாளத்தின் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுவென்று நடைபெற்று வருகிறது.


இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாராளுமன்றம் மற்றும் 7 மாகாண சபைகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 26ஆம் தேதி 32 மாவட்டங்களை உள்ளடக்கிய 37 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 74 மாகாண சபை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது. இந்நிலையில், இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

45 மாவட்டங்களை உள்ளடக்கிய 128 பாராளுமன்ற தொகுதி மற்றும் 256 மாகாண உறுப்பினர்களை தேர்வு செய்ய 122 லட்ச வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். பாராளுமன்ற தொகுதிகளுக்கு சரியாக 1,663 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் மாகாண சபைகளுக்காக 2,819 வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

இன்று காலை 7 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும், நடைபெற்று வருவதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 15,334 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ராணுவ வீரர்கள் உட்பட சுமார் 2 லட்ச பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. தேர்தல் முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.