ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த சதி: மு.க.ஸ்டாலின்

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 19:24

சென்னை,

திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை மீண்டும் நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் இன்று ஆய்வு நடத்தினார்.  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
ரூ 89 கோடி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றி மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறையாக நடந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது,  தமிழக அரசு இது குறித்து கவலைப்படவில்லை. சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.

மாயமான மீனவர்கள் குறித்து, முறையான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. காணமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை சரியாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் கூறினார்.