தேர்தலுடன் ராமர் கோயிலை தொடர்புபடுத்துவது ஏன்: காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 07:52


தன்துகா:

ராமர் கோயில் விவகாரத்தை லோக்சபா தேர்தலுடன் காங். தொடர்புபடுத்துவது ஏன் என்று பிரதமர்மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, நேற்று  தன்துகா என்ற இடத்தில் நடந்த பொது கூட்டத்தில் பேசியதாவது:

அயோத்தி விவகாரத்தில் கபில் சிபல் முஸ்லிம் சமுதாயம் சார்பில் ஆஜராவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அயோத்தி விவகாரத்தில் லோக்சபா தேர்தல் வரைக்கும் தீர்வு காண வேண்டாம் என எப்படி அவர் கூறலாம். எவ்வாறு அயோத்தி விவகாரம் லோக்சபா தேர்தலுடன் தொடர்பு கொண்டுள்ளது. ராமர் கோயில் விவகாரத்தையும், தேர்தலையும் தொடர்புபடுத்துவது ஏன்? அவரது எண்ணம் சரியா.. 2019பொதுத் தேர்தலுடன்  ராமர் கோயில் விவகாரத்தை காங். தொடர்பு படுத்த விரும்புகிறது. இது சரியானது தானா.. காங். கட்சிக்கு நாட்டை பற்றி சிறிது கூட கவலை கிடையாது.

முத்தலாக் விவகாரம் கோர்ட்டில் இருந்தபோது, அரசு அபிடவிட் தாக்கல் செய்தது. ஆனால், உ.பி., தேர்தல் காரணமாக மோடி அமைதியாக இருப்பார் என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் பற்றி பேச வேண்டாம். தேர்தலில் அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்படும் என சிலர் கூறினர். ஆனால், முத்தலாக் விவகாரத்தில் அமைதியாக இருக்கக்கூடாது என தெளிவாக இருந்தேன். அனைத்தையும்  தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது. இந்த விவகாரம் பெண்களின் உரிமை பற்றியது.  தேர்தல்  பின்னாளில் கூட வரலாம்.ஆனால் மனிதாபிமானம் தான் முதலில் நிற்கவேண்டும்..

அம்பேத்கருக்கும் சர்தார் படேலுக்கும் மிகப்பெரிய அநீதி இழைத்தது ஒரே ஒரு குடும்பம் தான்.. அது யார் என்று உங்களுக்கே தெரியும். சுதந்திரம் அடைந்த பிறகு 50ஆண்டுகளாக பதவியில் இருந்த காங்., ஏன் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று சிந்திக்கவே இல்லை.  தலித்துகளுக்கும்,படேல்களுக்கும் துரோகம் இழைத்தது காங். தான். பா.ஜ. மட்டும் தான் குஜராத் வளர்ச்சியில் அக்கறை கொண்டள்ளது. பா.ஜ. ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. வளர்ச்சியுடன் குஜராத்தில் பாதுகாப்பையும் தந்தது பா.ஜ. அரசுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இது பற்றி பா.ஜ.தலைவர் அமித்ஷா கூறுகையில், அயோத்தி விவகாரத்தில் ராகுலின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும். சுப்ரீம் கோர்ட்டில் கபில்சிபல் வாதங்கள், காங்கி ரசின் இரட்டை நிலையை எடுத்துக்காட்டுகிறது. குஜராத்தில் ராகுல் கோயிலுக்கு போகிறார். இன்னொரு பக்கம்  ராமஜென்மபூமி வழக்கை தாமதப்படுத்துவதற்காக கபில்சிபல்பயன்படுத்தப்படுகிறார்.   ஆனால் விரைவில் இந்த வழக்கை  விசாரித்து சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு அளிக்கவேண்டும். மிகப்பெரிய ராமர்கோயில் அயோத்தியில் கட்டப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கபில்சிபல் வழக்கறிஞர் என்ற முறையில் எந்த விவகாரத்திலும் வாதாடலாம். ஆனால் அவர்  முன்னாள்சட்ட அமைச்சர் என்பதை மறந்து விடக்கூடாது. கோர்ட்டில் அயோத்தி வழக்கை 2019 வரை விசாரிக்க வேண்டாம் என்று அவர் சொன்ன கருத்து வெளியில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை உணரவேண்டும். அவரது கருத்து நியாயம் அல்ல. பல வழிகளில் பொறுப்பற்ற தன்மையையே இதுகாட்டுகிறது. அயோத்தி விவகார வழக்கு விரைவில் முடிக்கப்படவேண்டுமா... வேண்டாமா.. இதில் காங். நிலை என்ன என்பதற்கு சோனியாவும் ராகுலும் பதில் அளிக்கவேண்டும்   என்றார்.

 ஒவாய்சிகள், ஜிலானிகளுடன் ராகுலும் கைகோர்த்து விட்டார், அதனால் தான் அயோத்தியில் ராமர் கோயிலை ராகுல் எதர்க்கிறார்.  ராகுல் நிச்சயம் பாபர் பக்தராக, கில்ஜியின் உறவினராகி விட்டார். ராமர் கோயிலை அழித்தவர் பாபர். சோமநாதர் ஆலயத்தை கொள்ளை அடித்தவர் கில்ஜி. இஸ்லாமிய படையெடுப்பாளர்களுக்கு ஆதரவாளர்களாக நேரு வாரிசுகள் மாறி விட்டனர் என்று பா.ஜ. செய்திதொடர்பாளர் நரசிம்மராவ் கூறி உள்ளார்.

ஆனால் கபில்சிபல் வழக்கறிஞர் என்ற முறையில் ஆஜராகி எடுத்துவைக்கும் வாதங்களுக்க எல்லாம் காங்.பொறுப்பு ஏற்க முடியாது. அவரதுவாதங்கள் வழக்கிறஞரின் வாதமே தவிர காங்கிரசின் கருத்து அல்ல என்று காங். செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜிவாலா கூறினார்.