பாபர் மசூதி மீண்டும் கட்டிதர வேண்டும் : இந்திய சமூக ஜனநாயக கட்சி கோரிக்கை

பதிவு செய்த நாள் : 07 டிசம்பர் 2017 02:49

சென்னை,

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25ம் ஆண்டு நினைவு தினத்தன்று  சென்னை, சேப்பாக்கத்தில்  இந்திய சமூக ஜனநாயக கட்சியின்  மத்திய சென்னை மாவட்ட தலைவர்  ஜுனைத் அன்சாரி தலைமையில் பாபர் மசூதியை மீண்டும் மத்திய அரசு கட்டித்தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி, பாப்புலர்  ஃப்ரண்ட்  மாநில பொதுச்செயலாளர் ஹாலித்முஹம்மது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவாரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இஸ்லாமிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பாபர் மசூதி இடிப்பு 25 ஆண்டுக்கால தேசிய அவமானம் என்று கூறும் அட்டைகளை அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

பாபர் மசூதியை மீண்டும் கட்டித்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும் பீகார் தலைநகரான பாட்னாவில் பாரதிய மோமின் முன்னனி உறுப்பினர்கள் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று துக்க தினம் கடைப்பிடித்தனர்.

இந்து சத்ய சேனா

பாபர் மசூதி இடிப்புத் தினமான இன்று ராமர் சிலை இருந்த இடத்தில் ராமர் கோவிலை உடனே கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சத்ய சேனா ஆர்பாட்டம் நடத்தியது.
காவி நிற கொடிகளை கைகளில் ஏந்தி அவர்கள் ராமர் கோவிலை உடனே எழுப்ப வேண்டும் என கோஷமிட்டனர். ராமர் கோவிலை கட்ட உதவியாக செங்கற்களை அனுப்புவதாகவும் அவர்கள் கோஷமிட்டனர்.