அம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினம்: குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை

பதிவு செய்த நாள் : 06 டிசம்பர் 2017 19:56

புதுடில்லி

சட்டமேதை அம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டில்லியில் உள்ள அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் கடந்த 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பணியாற்றினார். மேலும், உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கிய இவர், பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிக்கப் போராடியவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தார். இந்திய அரசியலமைப்பு சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் அம்பேத்கர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1948ஆம் ஆண்டில் இருந்து அம்பேத்கர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும், கண்பார்வை குறைந்ததாலும். 1954ஆம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையிலேயே கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம், மோசமான அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ஆம் ஆண்டு, இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ஆம் தேதி டில்லியில் உள்ள இவர் வீட்டில் இயற்கை எய்தினார்.

இந்நிலையில், இன்று அம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு சமூக வலைதளமான டுவிட்டரில் ஏராளமானோர், அவரின் கொள்கை, கருத்துக்கள் பகிந்து வருவதால், காலை முதலே ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது.

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் டில்லி பாராளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், தவர் சந்த் கெஹ்லாட், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி,”டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கரின் நினைவு தினத்தன்று நான் தலை வணங்குகிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். மேலும் பிரதமர் மோடி மும்பையில் உள்ள சைத்ய பூமிக்கு சென்ற போது அங்கு எடுத்த படங்களை டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி தன் டுவிட்டர் பக்கத்தில், அம்பேத்கரின் பொன்மொழி ஒன்றை பதிவு செய்து, அதன்கீழ் பாபாசாகிப் அம்பேத்காரின் நினைவு தினத்தன்று எனது மரியாதை” என்று பதிவுசெய்துள்ளார்.