திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பதிவு செய்த நாள் : 03 டிசம்பர் 2017 02:46

திருவண்ணாமலை,

2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் மகா தீபத்தை கண்டு வணங்கினார்கள்.


பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து, 10ம் நாளான இன்று முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (2.12.2017) அதிகாலை நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றபட்டது.

இந்நிகழ்ச்சியில்,  பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர்.

200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், 1000 மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன.

இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவின்படி அனுமதி வழங்கப்பட்டது.

தீபம் ஏற்றும்போது அண்ணாமலையார்க்கு ஆரோகரா என்று பக்தர்கள் கோஷமிட்டனர்.

தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் குவிந்தனர். இன்று மலைமீது ஏற்றப்படும் மகா தீபமானது 11 நாட்கள் வரை எரியும்.