ராஜிவ் கொலைக் கைதி பேரறிவாளனை விடுவிக்கலாமா..: மத்தியஅரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:45


புதுடில்லி:

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யலாமா என்பது பற்றி மத்தியஅரசு கருத்து தெரிவிக்கும்படி சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ்  கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னை அருகே திருப்பெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தின் போது குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தூக்குத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்  ஆயுள் தண்டனையாக குறைத்தது. இவர்கள் 7 பேரும் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனர்.. கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

 தண்டனைக்காலம் முடிவடைந்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. நளினி, முருகன் உள்ளிட்ட 7பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கும் தீர்மானம் அனுப்பப்பட்டது.  இதற்கு மத்திய அரசு   அனுமதி அளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். ஆனால் அதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் பேரறிவாளனை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு மனு செய்தார். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. அதேநேரத்தில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பேரறிவாளன், ஒருமாதம்  பரோலில்  விடுவிக்கப்பட்டார். இதற்கிடையில், பேரறிவாளனின் தந்தை உடல்நிலை சரியில்லாததால், மேலும் ஒரு மாதம் பரோலை நீடிக்க அற்புதம்மாள் மீண்டும் மனு அளித்திருந்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்த நிலையில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன், சுப்ரீம் கோர்ட்டில்  மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு,  எனக்கு  ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.  கடந்த 26 ஆண்டுகளாக நான் சிறையில் இருக்கிறேன்.  பெல்ட் குண்டு தயாரித்ததாக கூறப்படுபவர் இன்றும்  இலங்கையில்தான் உள்ளார். குண்டு தயாரித்தவர் கைதாகாத நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பேரறிவாளனை விடுவிக்கலாமா.. வேண்டாமா என்பது பற்றி 2 வாரத்துக்குள் மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.