ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:42


சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஆயுதப்படை காவலர் மாயழகு மீது தற்போது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடைபெற்றது. அப்போது காவலர் சீருடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புதுப்பேட்டை ஆயுதப்படைக் காவலர் மாயழகு, மைக் பிடித்து ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.

போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அப்போதைய சென்னை மைலாப்பூர் காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், மாயழகு மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படாது என அறிவித்தார். 

10 மாதங்கள் கழிந்துள்ள நிலையில், மாயழகு மீது தற்போது 3 B Charge எனப்படும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பதவி உயர்வு, ஊதிய உயர்வு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மாயழகு மீதான நடவடிக்கைக்கு சக காவலர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.