கர்நாடக அமைச்சர் ஜார்ஜ் ராஜினாமா: சட்டசபையில் பா.ஜ. தர்ணா, கடும் அமளி எதிரொலி

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 08:32


பெங்களூரு:

கர்நாடக அமைச்சர் ஜார்ஜ் நேற்று பதவி விலகினார். தார்மீக அடிப்படையில் அவராகவே விலகிக்கொண்டார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பா.ஜ. அமைச்சர்களும் இதே போல ராஜினாமா செய்வார்களா... என்று முதல்வர் சித்தராமையா சவால் விடுத்தார். முன்னதாக ஜார்ஜ் விலகக் கோரி கர்நாடக சட்டசபையில் பா.ஜ. தர்ணா செய்து கடும் அமளியில் ஈடுபட்டது.

கர்நாடக டி.எஸ்.பி. கணபதி குடகு நகரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி  தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு  காரணம் என்று கர்நாடக அமைச்சர் ஜார்ஜ், உயர் அதிகாரிகள் ஏ.எம். பிரசாத், பிரணாப் மொகந்தி என 3 பேர் பெயரை குறிப்பிட்டு வீடியோ தகவல் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து . அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் மீது . எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அவர் பதவி விலகவேண்டும் என்று பா.ஜ. கோரி வருகிறது. ஆனால், எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என்பதற்காகவே ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், மத்தியஅமைச்சர்கள் பலர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்கிறதே.. அவர்கள் விலகுவார்களா.. என்று காங். கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தநிலையில் இந்த விவகாரம நேற்று கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது.  நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் எழுந்து பிரச்னை கிளப்பினார். டி.எஸ்.பி. தற்கொலையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் ஜார்ஜ் பதவி விலகக்கோரி ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளோம். சி.பி.ஐ. விசாரணை முடியும் வரை அவர் பதவி யில் நீடிக்க எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது. அமைச்சர் பதவியில் நீடித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே . அது பற்றி விவாதிக்கவேண்டும் என்றார்.

இதற்கு சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா எதிர்ப்பு தெரிவித்தார். பா.ஜ. நோட்டீசே தவறானது. கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இது பற்றி விவாதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து ஆளும், எதிர்தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  ஏற்கனவே இது பற்றி விவாதித்து முடித்து விட்டதால் பா.ஜ. கோரிக்கையை நிராகரிப்பதாக சபாநாயகர் கூறினார்.  இதையடுத்து பா.ஜ. உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று தர்ணா செய்தனர்.  இதையடுத்து கூச்சல்குழப்பம் நிலவியதால் சபையை மதியம் வரை சபாநாயகர் கோலிவாட் ஒத்திவைத்தார்.

இதற்கிடையில் நேற்று மதியம் அமைச்சர் பதவியில் இருந்து கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்துள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். ஜார்ஜ் பதவி விலகுவதை நான் விரும்பவில்லை. அதற்கான தேவையும் இல்லை. எனவே பதவி விலகவேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன்.  இருப்பினும் தார்மீக அடிப்படையில் அவராகவே விலகிக்கொண்டார். எனவே ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன். இந்த விவகாரம் பற்றி ஏற்கனவே சட்டசபை மற்றும் மேல்சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது.  அவர் முதன்முதலாக பதவி விலகியபோதும், இதையே கூறினேன். வெறும் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதாலேயே  யாரும் பதவி விலகவில்லை. அது தான் வழக்கம் என்றால், நாடு முழுவதும் எத்தனையோ தலைவர்கள், அமைச்சர்கள் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதே.. அப்படியானால் அவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.  மத்தியஅரசில் அங்கம் வகிக்கும் 24 அமைச்சர்கள் மீதும் எப்..ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் பதவி விலகட்டும் என்று சித்தராமையா கூறினார்.