குடும்ப கட்டுப்பாடு பற்றி பேச அரசியல்வாதிகள் வெட்கப்படுவதா... துணை ஜனாதிபதி வேதனை

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 07:30


புதுடில்லி:

குடும்ப கட்டுப்பாடு பற்றி பேச சில அரசியல் தலைவர்கள் வெட்கப்படுகிறார்கள் என்று துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு கூறினார்.

டில்லியில் நேற்று  குடும்ப கட்டுப்பாடு தொடர்பான நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு பங்கேற்றார். அவர் பேசியதாவது:

குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக  விரிவான விவாதம் நடத்த வேண்டும். அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்த வேண்டும்.  குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றும்படி மக்களை ஊக்குவிக்கவேண்டும். இதற்காக ஊக்கத் தொகைகள் அறிவிப்பதும் அவசியம் ஆகும். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் ஒத்துழைப்பு தர சில அரசியல்தலைவர்கள் வெட்கப்படுகிறார்கள். காரணம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தினால் ஓட்டுகள் குறைந்து விடுமே என்பது அவர்களின் கவலை. நோய்கள் வராமல் தடுப்பது தொடர்பாக முன் எச்சரிக்கைகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  நல்ல ஆரோக்கியத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாற வேண்டும்.  டி.வி., சினிமா, சமூக வலைதளங்கள் என்று மூழ்கி கிடப்பவர்களுக்கு இது முக்கியமானது ஆகும். குடும்ப கட்டுப்பாட்டின் பயன்கள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும்.  ஆரோக்கியமான தேசத்தை உருவாக்கும் வகையில் மனிதாபிமான அடிப்படையில் நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றியவர், வெங்கய்யாநாயுடுவை பா.ஜ. முன்னாள் தலைவர்... முன்னாள் மத்தியஅமைச்சர்... என்று குறிப்பிட்டார். இது பற்றி வெங்கய்யாநாயுடு கூறுகையில், அரசியலில் இருந்து நான் விடை பெற்று விட்டேன். பி.ஜே.பி.யுடன் எனக்குஎந்த தொடர்பும் கிடையாது. ஆனால் ஜே.பி.யுடன் நட்பு உண்டு என்றார். மத்தியசுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைத்தான் ஜே.பி. என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.