விதிகள் சார்ந்த பாதுகாப்பு கட்டமைப்பை இந்தியா ஆதரிக்கிறது: ஆசியன் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 03:07

மனிலா,

உலகில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு அவசியம். வளம் மிக்க நம் பிராந்தியத்தை பாதுகாக்க விதிகள் சார்ந்த பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஆசியன் மாநாட்டில் கூறினார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும் ஆசியன் மாநாட்டில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தெற்காசிய பிராந்தியத்தின் மிக பெரும் சவால்களாக பயங்கரவாதம் மற்றும் மதவாதம் திகழ்கிறது என்றார்.
மோடி ஆற்றிய உரையின் விவரம் :
நாம் அனைவரும் தனிப்பட்ட முறையில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வருகிறோம். தற்போது நாம் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து போராடும் நேரம் வந்துவிட்டது.தெற்காசிய நாடுகளின் தீவிரமான ஒருங்கிணைப்பால் பயங்கரவாத அச்சுறுத்தல்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம்.

தெற்காசிய நாடுகளின் அமைதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் விதிகள் சார்ந்த பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க எப்போதும் முழு ஆதரவு அளிப்போம் என ஆசியன் நாடுகளுக்கு இந்தியா உறுதியளிக்கிறது என மோடி தெரிவித்தார்.

மோடி தன் உரையில் தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். தென் சீன கடலை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆசிய பசிபிக் கடல் பகுதிகளில் செயற்கை தீவுகள் உருவாக்கி அதில் ராணுவ படைத்தளத்தை அமைத்து வருகிறது.

சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆசியன் கூட்டமைப்பை சேர்ந்த சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆசியன் மாநாட்டில் சீனாவின் இந்த அதிகார போக்கு குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.