அமெரிக்காவில் கடந்த ஆண்டு 6121 இனவெறி தாக்குதல்கள் பதிவு: எப்.பி.ஐ அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 02:17

வாஷிங்டன்,

அமெரிக்காவில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட பிற நாட்டினர் மற்றும் மதத்தினர் மீது கடந்த ஆண்டு மட்டும் 6121 இனவெறி தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக எப்.பி.ஐ (FBI) அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி,ஐ தனது ஆண்டறிக்கையை திங்கட்கிழமை வெளியிட்டது. அதில் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் சுமார் 6121 இனவெறி தாக்குதல்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்.பி,ஐ அறிக்கையின் படி இது 2015ம் ஆண்டை விட 5 சதவீதம் அதிகம். இதில் பெரும்பாலான தாக்குதல்கள் ஆப்பரிக்க, அமெரிக்கர்கள் மற்றும் யூதர்கள் மீது நடத்தப்பட்டுள்ளன. கால்வாசி சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்துக்கள் மீது 12 தாக்குதல்களும் சீக்கியர்கள் மீது 7 தாக்குதலும் நடைபெற்றுள்ளன. புத்த மதத்தினர் மீது ஒரு தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

மேலும் 6121 இனவெறி தாக்குதலில் 3.1 சதவீதம் ஆசியர்களுக்கு எதிராகவும் 1.3 சதவீத தாக்குதல்கள் அரேபியர்களுக்கு எதிராகவும் நடந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த அறிக்கை குறித்து செய்தி வெளியிட்ட அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (The Council on American-Islamic Relations) இந்த இனவெறி தாக்குதல்களுக்கு எதிராக நாடு முழுவதும் அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஆனால் எப்.பி,ஐ அறிக்கை வெளியிட்ட இந்த தகவல்கள் துல்லியமாக இல்லை என சீக்கிய அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது தொடர்பாக பேசிய சீக்கிய கூட்டமைப்பின் தேசிய சட்ட மேலாளர் சிம் சிங்  ‘‘கடந்த ஆண்டு சீக்கியர்கள் மீது வெறும் 7 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக எப்.பி.ஐ. கூறுவது பெரும் பனிப்பாறையின் நுனியை காட்டுவது போன்றது’’

‘‘உண்மையில் சீக்கியர்கள் மீது பல தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் சட்ட அமலாக்கப் பிரிவுகள் இனவெறி தாக்குதல் தொடர்பான தகவலை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டால் உண்மை வெளிவரும்’’ என சிம் சிங் கூறினார்.

கடந்த 2016ம் ஆண்டு சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக சீக்கிய கூட்டமைப்பில் 15 புகார்கள் வந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரை 13 புகார்கள் வந்துள்ளன.

எனவே அமெரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்கள் இனவெறித் தாக்குதல் குறித்த தகவல்களைச் சரியாக பதிவு செய்யாவிட்டால் உண்மை நிலவரம் தெரியாமல் போகும். பின்பு இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்த சரியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லை என சிம் சிங் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுமார் 5 லட்சம் சீக்கியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

பெரும்பாலும் சீக்கியர்களை முஸ்லிம்கள் என தவறாக கருதி இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதம் வாஷிங்டனில் சீக்கியர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டது குறிப்பிடத்தக்கது.