சசிகலாவை விசாரியுங்கள்: தினகரனை சிறையில் அடைக்கவேண்டும் – ஈவிகேஎஸ் ஆவேசம்

பதிவு செய்த நாள் : 15 நவம்பர் 2017 00:29

சென்னை:

சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள், பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜவஹர்லால் 128வது பிறந்தநாள் விழா சென்னை- கிண்டியில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு மலர்மரியாதை செய்தார்  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது

சசிகலா உறவினர்களின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் எதுவுமில்லை என்று அவர் கூறினார்.

சிறையில் இருந்து சசிகலாவை வெளியில் கொண்டு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். வருமான வரித்துறையின் ஒட்டு மொத்த சோதனைக்கும் சசிகலாதான் முதல் குற்றவாளி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரனை வெளியில் விட்டதே தவறு என்று கூறிய அவர், தினகரனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தினார்.