ஆசியன் மாநாட்டில் உலக தலைவர்களைச் சந்தித்து பேசினார் பிரதமர் மோடி

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017 21:29

மனிலா:

பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸில் நடைபெற்று வரும் ஆசியன் மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் 10 தென்கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பான ஆசியன் அமைப்பின் உச்சி மாநாடு திங்கட்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பத்து தென்கிழக்கு நாடுகளை தவிர இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட மேலும் பல நாடுகள் பங்கேற்றுள்ளன.

மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று அரங்குக்கு வெளியே சில உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களைத் தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவு குறித்து மோடி ஆலோசனை நடத்தினார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சொ அபேவை சந்தித்து பேசிய மோடி ஆசியாவின் இரு சக்திவாய்ந்த நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இவர்களின் சந்திப்பு குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்ட இந்திய வெளியுறவு துறை பேச்சாளர் ரவீஷ் குமார்  ‘‘ இந்தியாவின் மதிப்புமிக்க நண்பர் மற்றும் நம்பகமான பங்குதாரரை பிரதமர் சந்தித்து பேசினார். இரு நாடுகளின் உலகளாவிய கூட்டுறவை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர்’’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்புல் மற்றும் வியட்நாம் அதிபர் நகுயென் சுவான் புக் ஆகியோரையும் சந்தித்து பேசினார். அவர்களுடன் இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

தென் சீன கடலில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள தென்சீன கடல் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு ஆசியன் கூட்டமைப்பைச் சேர்ந்த வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனேய் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் 1982ம் ஆண்டு ஐ.நா கொண்டு வந்த கடல் சட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. இந்த சட்டத்தின் படி தென்சீன கடலில் கப்பல் போக்குவரத்துக்கும் அதன் வளங்களை அணுகவும் அனைத்து நாடுகளுக்கும் உரிமை உண்டு.

இது தொடர்பாக இரு தினங்கள் முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியன் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மிக தன்னுடைய முக்கிய நண்பரான புரூனேவின் சுல்தான் ஹசனல் போல்கியாவையும் பின் நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்னையும் மோடி சந்தித்து பேசினார்.