மாநில தேர்தல் ஆணையர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017 02:28

சென்னை,

குறிப்பிட்ட காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாதது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர் மனுதாக்கல் செய்துள்ளார்.


தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாத மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக் கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், செப்டம்பர் 18ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, நவம்பர் 17-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்ததோடு, இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, மாநிலத் தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் மாலிக் ஃபெரோஸ்கான் மற்றும் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடாததில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும், நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும், வார்டு வரையறை பணிகள் நிறைவடையாததால் தேர்தல் அறிவிப்பு தாமதம் ஆகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார்டு வரையறை தொடர்பாக 5 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இழுத்தடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றும், பணிகளை முடித்து விரைவில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதி மன்றத்தில்  கேட்டுக்கொண்டுள்ளது.