பிலிப்பைன்ஸில் பிரதமர் மோடி, டிரம்ப் பேச்சுவார்த்தை: ராணுவம், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017 00:10

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ஆசியன் உச்சி மாநாட்டில் அரங்குக்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினர். இருவரும் இருதரப்பு உறவு, பாதுகாப்பு, ராணுவம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடந்து வரும் ஆசியன் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார்.  இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, மியான்மர், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றுள்ளன.

இன்று துவங்கிய ஆசியன் மாநாட்டில் பிரதமர் மோடி அரங்குக்கு வெளியே அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இருவர் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பாதுகாப்பு விவகாரங்கள், ராணுவம் போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

கடந்த சனிக்கிழமை வியட்நாமில் நடந்த உச்சி மாநாட்டில் அரங்குக்கு வெளியே நடைபெற்ற நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியை பாராட்டி பேசினார்.

டிரம்பின் பாராட்டுக்கு பிரதமர் மோடி இன்று நன்றி தெரிவித்தார். இது குறித்து மோடி கூறுகையில்  ‘‘கடந்த சில நாட்களாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதிபர் டிரம்ப் இந்தியாவை குறித்து மிக உயர்வாக பேசி வருகிறார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆசியாவின் சிறந்த எதிர்காலத்திற்காகவும் உலக நன்மைக்காகவும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்’’ என மோடி கூறினார்.