மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்! – 77

பதிவு செய்த நாள் : 14 நவம்பர் 2017

அதனால் அவ்வேதியச் சிறுவரைக் கண்டதும் அப்பசுக்கள் அவரருகே அன்போடு வந்து மனமுருகி நிற்கும்! அவரைத் தன் கன்றாகப் பாவித்து உருகி உருகித் தாய் போல் குரல் எழுப்பிக் கனைத்து, பால் மடிசுரந்து, கறவாமலேயே அவை பாலைப் பொழியும்! பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக் காணும்தோறும்  விசாரசர்மருக்கு சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்யும் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால் சிவபூஜை செய்ய வேண்டும் என்ற வேட்கை அவருக்கு விரைந்தெழும்! முற்பிறவியில் அவர் சிவபூஜை செய்த உணர்வின் தொடர்ச்சியால், இப்போது அச்சிறுவர் விளையாட்டாகப் பொங்கும் அன்போடு சிவபூஜை செய்ய முனைவார். மண்ணியாற்றங்கரையிலுள்ள ஒரு மணல் தட்டில், அத்தி மரத்தின் கீழே, சிவனாரின் உருவமாகிய லிங்க வடிவை மணலால் உருவாக்கி வைப்பார்.

 அதற்கு மணலாலே சின்னஞ்சிறு சிவாலயமும் கட்டுவார். மணலாலேயே திருமதில்களும், கோபுரங்களும், பிராகாரங்களும் வகுத்தமைப்பார். வழிபாட்டுக்குப் பூப்பறித்து வர இலைகளாலேயே ஒரு பூக்கூடை கோப்பார். அத்தி மலர், செழுந்தளிர், அருகில் வளரும் முல்லை நிலத்துக் காட்டுப்பூக்கள் முதலானவற்றையும் இறைவரின் திருமுடி மீது சாத்துவதற்கு திருப்பள்ளித் தாமங்கள் பலவற்றையும் அவர் கொய்து அப்பூக் கூடையில் கொண்டு வருவார்.  நாணற் பூங்கொல்லை, ஆற்றிடைக் குறை மறைவு முதலான இடங்கள் மேயும் பசுக்களிடம் அவர் சென்று, கறவைப் பசுக்கள் ஒன்றுக்கு ஒரு காம்பாக மடியைத் தொடுவார். உடனே ஒவ்வொரு பசுவும் கனைத்துப் பால் சொரியும். அப்பாலையெல்லாம் அவர் ஒரு குடம் நிறைய நிரப்பிக்கொண்டு வெண்மணல் ஆலயத்தின் முன்னால் வைப்பார். முற்பிறப்பின்  உணர்வினால் திருப்பள்ளித் தாமங்களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அர்ச்சித்து கறவைப் பாலினால் திருமஞ்சனமாட்டுவார். பூசைக்கு கிட்டாத பொருட்களை மனதினால் பாவித்து நிரப்புவார்.

அவருடைய மனோபாவனையால் உருவாக்கிய சின்னஞ்சிறு மணல் லிங்கத்தினுள் சிவபெருமான் கலந்து நின்று அத்தகைய அன்புப் பூஜையை விருப்போடு ஏற்றருள்வார். வேதியச் சிறுவர் விசாரசர்மர் அவ்வாறு உள்ளன்போடு இறைவருக்கு பாலாபிஷேகமும் பூவார்ச்சனைகளையும் செய்து மனம் மகிழ்ந்து வருவார். அவருடைய சிவபூஜைக்கு கறவைப் பசுக்கள் குடம் நிறைய பால் சொரிந்தும் உதவியும் கூட உரியவர்களான மறையவர்களின் வீடுகளிலும் உரிய பாலைச் சிறிதும் குறையாதபடி வழங்கி வந்தன.

 இவ்விதம் சேய்ஞலூர்ப் பிள்ளையான விசாரசர்மர் விளையாட்டாக மணல் லிங்கத்திற்குப் பாலாபிஷேகத்தோடு பூஜை செய்து வரும் நாட்களில் ஒரு நாள், அயலான் ஒருவன் சேய்ஞலூர்ப் பிள்ளையின் அச்செய்கையைக் கண்டான். விளையாட்டுப் பூஜையின் உண்மைத் திறத்தை அவன் உணராதவனாய், அவ்வூர் அந்தணர்களிடம் சென்று, பால் வீணாவதாகக் கூறி விசாரசர்மரின் செய்கையை அறிவித்தான்.

 அதைக் கேட்ட அந்தணர்கள், ‘இடையனுக்கு மாடு மேய்க்கத் தெரியவில்லையென்று சொல்லி அந்தப் பிராமணச் சிறுவன் நம்முடைய பசுக்களின் குணமறிந்து அவனே  மேய்ப்பதாகக் கூறினான். ஆனால், அவன் நம்மை எல்லாம் வஞ்சித்து நம்முடைய பசுக்களின் பாலைக் கறந்து கொண்டு பொய் வேடம் போட்டு நடிக்கிறான். அவனுடைய பொல்லாங்கை சொல்வதற்கு அவன் தந்தை எச்சதத்தனை அழைத்து வாருங்கள்!’ என்று கூறினார்கள். உடனே அருகில் நின்றவர்கள் எச்சதத்தரின் வீட்டிற்குச் சென்று அவனை அழைத்துக் கொண்டு வந்து அந்தணர்களின் சபையில் நிறுத்தினார்கள்.

 சபையிலுள்ள அந்தணர்கள் எச்சதத்தனைப் பார்த்து ‘மறையவனே! மாடு மேய்க்கும் உன் மகனின் தீங்குச் செயலைக் கேள்!’ என்று அங்கு நிகழ்ந்த விதத்தைக் கூறலானார்கள்.

‘அந்தண வேதியர்களின் ஆகுதிக்குப் பால் கறக்கும் பசுக்களையெல்லாம் உன் சிறுவன் அன்போடு மேய்ப்பவன் போல் நடித்து அவற்றை மண்ணியாற்றங்கரைக்குத் திரளாக ஓட்டிச் சென்று, பாலைக் கறந்து அவன் மனம் போனபடியெல்லாம் மணலில் கொட்டி விளையாடி வீணாக்குகிறானாம்! இதை ஒருவன் வந்து சொன்னான்’ என்று புகார் கொடுத்தார்கள்.

 அம்மறையவர்களின் சொற்களைக் கேட்ட எச்சதத்தன்  பயந்து நடுங்கி,  ‘பெருமை நிறைந்த பிராமணோத்த மர்களே! என் சிறு ைபயன் செய்த பிழை இது! இது பற்றி எனக்குச் சிறிதும் தெரியாது!  இதற்கு முன் நடந்ததை நீங்கள் பொறுத்தருள வேண்டும். இனிமேல் இது போல் பிழை நிகழுமானால் அக்குற்றம் என்னுடையதேயாகும்’ என்று சொல்லிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு போய், சந்தியாவந்தனம் செய்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்றார். தன் மகனால் தனக்கு இப்படியொரு பழி வந்ததே என்று நினைத்து அவர் வருந்தினார். ஆனால் அதை தன் மகனிடம் வாய்விட்டுச் சொல்லாமல்,  ‘இந்த நிலையை நானே நேரில் கண்டறிவேன்’ என்று முடிவு செய்தார்.

அன்றிரவு கழிந்தது.  மறுநாள் காலையில் எச்சதத்தனின் சிறு மகனாரான விசாரசர்மர் வழக்கம்போல் மறையவர்களின் பசுக்களை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றார். அவருடைய தந்தை எச்சதத்தன் அவருக்குத் தெரியாமல் அவர் பின்னாலேயே மறைந்து சென்றார். ஊரிலுள்ள பசுக்கூட்டங்களை  எல்லாம் விசாரசர்மர் ஓட்டிச் சென்று  

மண்ணியாற்றங் கரையில் அவற்றை மேயவிட்டார். அப்போது அவரது தந்தை எச்சதத்தன் அங்கு மணல் திட்டின் அருகேயுள்ள ஒரு மாமரத்தில் ஏறிக்கொண்டு நிகழ்வதை அறிந்து கொள்வதற்காக ஒளிந்திருந்தார்.

 விசாரசர்மர் வழக்கம்போல் அன்புப் பூஜை புரிவதற்காக மண்ணியாற்றில் நீராடினார். முன்போலவே மணலில் சிவலிங்கம் செய்து, அப்பெருமானுக்கு மணற்கோயில் முதலியன எழுப்பினார். அன்று மலர்ந்த மெல்லிய மலர்களையும் கொய்து வந்தார்.