கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 102

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2017தன்பாட்டுக்கு 60 வருடங்களாகப் பாடி வந்த எஸ்.ஜானகி, இப்போது நிப்பாட்டு என்கிறார்!

சென்ற அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான 29 அன்று, மைசூருவில் ஒரு மெல்லிசை கச்சேரி செய்தார் எஸ். ஜானகி. மைசூரு பல்கலைக்கழகத்தின் விசாலமான மானஸகங்கோத்ரி அரங்கில், முன்னாள் நட்சத்திரங்கள் ஜெயந்தி, பாரதி, ஹேமா சவுத்ரி போன்றோரும் ஏனைய கன்னட திரைப் பிரமுகரும் பார்த்து ரசிக்க, பத்திரிகைகளின் கூற்றுப்படி 20,000 ரசிகர்களின் முன் நான்கு மணி நேரத்திற்கு மேல் எஸ். ஜானகி பாடினார்.

அறுபதுகளில், தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் பி.சுசீலாவின் ஆட்சி தொடங்கியது. அதே காலகட்டத்தில் மெல்ல மெல்ல கன்னட திரைப்படங்களிலும், மலையாளம் சினிமாவிலும் ஜானகி நன்றாக காலூன்ற ஆரம்பித்துவிட்டார். கன்னடத்தில் அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களில் தலையாய நாயகிகள் மிளிர்ந்திருக்கிறார்கள்.  

கன்னடத்தின் ‘மினுகு தாரே’ (மின்னும் நட்சத்திரம்) என்று அறியப்பட்டவர் கல்பனா. ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’, ‘சாது மிரண்டால்’, ‘பட்டத்து ராணி’, ‘கட்டிலா தொட்டிலா’ என்று சில தமிழ் படங்களிலும் நடித்தவர். ‘பெல்லி மோடா’, ‘ஷரபஞ்சரா’ போன்ற உயர்தர கன்னடப்படங்களில் நடித்தவர். ‘பெல்லி மோடா’வில் கல்பனாவிற்காக விஜயபாஸ்கர் இசையில் ஜானகி பாடிய, ‘முட்டின நீரின’ என்ற பாடலை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இனிமையும் அமைதியும் தவழும் பாடல் அது.

‘மாவன மகளு’ என்ற படத்தில் (1965) ஜெயலலிதாவுக்குப் பாடினார் எஸ்.ஜானகி. ‘நானே வீணே, நீனே தந்தி’ (நான்தான் வீணை, நீதான் தந்தி) என்ற பாடலில், கல்யாண்குமாருடன் நடித்தார் ஜெயலலிதா. முன்னவருக்கு பி.பி.ஸ்ரீநிவால், ஜெயலலிதாவுக்கு ஜானகி என்று அமைந்த பாடல் ஒரு தேனான மெலடி.

இதோ 2017ல் ஜானகியின் மைசூரு நிகழ்ச்சியில் முன்னணியிலிருந்து அவர் பாடல்களுக்கு செவி மடுத்த நடிகை பாரதி, தமிழில் ‘நாடோடி’, ‘பூவும் பொட்டும்’, ‘தங்கச்சுரங்கம்’, ‘அவளுக்கென்று ஒரு மனம்’ உட்பட சில படங்களில் நடித்தவர். ‘சந்தியா ராகம்’ என்ற கன்னடப்படத்தில் பாரதிக்கு,  ‘நம்பிதே நின்ன நாத தேவதே’ என்ற கனமான கர்நாடக ராகப்பாடலை அற்புதமாக  இசைத்தார் ஜானகி. படத்தில் இதே பாடல், நாயகன் (ராஜ்குமார்) பாடுவதுபோலவும் ஒரு முறை வருகிறது. அதைப் பாடியவர், பின்னாளில் பாரத் ரத்னா விருது பெற்ற, பீம்சேன் ஜோஷி என்ற இந்துஸ்தானி பாடகர். அது ஒரு பக்கம் இருக்கட்டும், இதே நடிகை பாரதிக்காக 'அவளுக்கென்று ஒரு மனம்' படத்தில், ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என்று ஜானகி பாடிய கெத்தான பாடலை யாராவது மறக்க முடியுமா? பாரதியாலும் மறக்க முடியாது.இப்படி எத்தனையோ பெருமைகளை எளிதில் தனதாக்கிக்கொண்டவர் எஸ்.ஜானகி. தனக்கு வயதாகிவிட்டது என்பதை என்றும் அவர் ஏற்காதவர். அதனால்தான் அறுபதையெல்லாம் ஒரு வயதாகக்கருதாமல் இளம் நாயகிகளுக்குத் தொடர்ந்து பாடி வந்தார். அறுபதிலும் இனிமை வரும் என்று அபிப்ராயத்தில் இருந்தவர் அவர். ஆனால் இப்போது 79ம் வயதில், உடம்பும் படுத்துகிறது, குரலும் எடக்குப் பண்ணுகிறது, வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களும் வருத்துகின்றன, போதும் என்று மைசூருவில் அறிவித்துவிட்டார். அவர்  சினிமா பாடகியாக காலெடுத்து வைத்த 1957ல், மைசூருவில் பி.பி.ஸ்ரீநிவாஸூடன் ஓர் இசை நிகழ்ச்சியில் பாடினாராம். இப்போது அதே மைசூருவில் கடைசி நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இடையில் அறுபது வருங்கள் ஓடிவிட்டன.

 மைசூருவில் செய்த நிப்பாட்டு அறிவிப்பைப்போல்,  2016ல் கோழிக்கோட்டிலும் ஓர் அறிவிப்பு செய்தவர்தான் ஜானகி. ஜானகியின் மலையாள திரைப்பாடல் சாதனைகளுக்காக அவரை அழைத்து அப்போது நிகழ்ச்சி அமைத்திருந்தார்கள். அதனால், இன்னொரு அசகாயசூரரான ரசிகரின் வற்புறுத்தலின் பேரில், இன்னொரு முறை கூட அவர் கடைசி நிகழ்ச்சியை வழங்கக்கூடும்!  செய்யட்டுமே! யாருக்கு என்ன நஷ்டம்?

தன்னுடைய கடைசி நிகழ்ச்சி தன் பெயரைக் கெடுத்துவிடக்கூடாது என்பதில் ஜானகி திடமாகயிருந்தார். மைசூரு நிகழ்ச்சிக்கான வாத்தியக்குழு உள்ளூர் குழுதான். அவர்கள் பாடல்களுக்கு சரியாக வாசிக்கவேண்டும். தன்னோடு சேர்ந்த அவர்கள் சரியாக இணைய வேண்டும். தான் தேர்ந்தெடுத்திருந்த நாற்பது பாடல்களை மூன்று முறையாவது அவர்களுடன் சேர்ந்து ஒத்திகை பார்க்கவேண்டும். ஒத்திகைக்காக ஐதராபாத்திலிருந்து விமானத்தில்  மூன்று முறை வந்து போவது, காஸ்ட்லி ஓட்டல்களில் தங்குவது போன்ற விஷயங்களை வீண் பண விரயம் என்று நினைத்தார் ஜானகி. நிகழ்ச்சியிலிருந்து வரும் பணத்தை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக செலவுசெய்ய அவர் நினைத்திருந்தார் போலும். ஆகவே தன்னுடைய சொந்த செலவை குறைத்துக்கொள்ள, மைசூருவிலேயே இரண்டு மாதங்களுக்கு ஒரு வீட்டை எடுத்து தன்னுடைய மகனுடன் அங்கு தங்கினார். தனக்குத் தோன்றியபோது வாத்தியக்குழுவை அழைத்து ஒத்திகைப்பார்த்தார். கலைஞர் ஆயிற்றே! தன்னுடைய பாட்டில் அவருக்கு முழு திருப்தியில்லை. வயதின் காரணமாக கீழே இருக்கும் ஸ்வரங்களைப் பிடிப்பது கஷ்டமாக இருந்தது. எப்படியும் நிகழ்ச்சி நல்லவிதமாக முடிந்தது.

குண்டூர் ஜில்லாவின் ரேபல்லே தாலுகாவில் பல்லபட்லா என்கிற  அநாமதேய கிராமத்தில் ஏப்ரல் 23, 1938ல் பிறந்தவர் ஜானகி. சிறிது காலம் ஸிர்ஸில்லா என்ற ஊரிலும் வசித்தவர். மிகச்சிறு வயதிலேயே ரேடியோவில் கேட்கும் திரைப்பாடல்களைத் திருப்பிப்பாடும் தன்மை இருந்தது. ஜெமினி 1942ல் தயாரித்த 'பாலநாகம்மா'வின் பாடல்களை, அந்தக்கால நினைவில் இப்போதுகூட ஜானகி பாடுவார். ராஜமுந்திரியில் தமக்கை சங்கீதம் கற்கச் சென்றபோது, சிறுமி ஜானகியும் உடன் அனுப்பப்பட்டாள். ஆனால் அப்போது கர்நாடக சங்கீதம் எல்லாம் கற்கும் ஆசை ஜானகிக்கு இல்லை. சங்கீத வாத்தியார் காடவல்லி பைடிசாமி நாகஸ்வர வித்வான் மட்டும் அல்ல, சிறந்த ஆசிரியருமாவார். ஏ.பி.கோமளாவை ஒரு வருஷத்தில் கச்சேரி மேடைக்குத் தகுதியானவளாக ஆக்கியவர் அவர்தான். சிறுமி ஜானகியைப் பாடச்சொல்லி கேட்டார். என்ன ஆச்சரியம்!  அவள் குரல் சரியான ஸ்வரஸ்தானங்களில் சஞ்சரிப்பதாக இருந்தது. ஆகவே, அவளை சரளி வரிசைகளில் போட்டு வறுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று ஆரம்பத்திலேயே ‘நகுமோமு கனலேனி’ என்ற ஆபேரி ராக கீர்த்தனையில் ஆரம்பித்துவிட்டார்.

‘‘நான் ஒரு வருஷம் கூட அவரிடம் கற்றிருக்கமாட்டேன். அதற்குள் அவர் இறந்துவிட்டார்,’’ என்பார் ஜானகி.  இடைப்பட்ட வயதிலேயே  பைடிசாமி மறைந்தார். ஆனால் ஜானகிக்கு ரேடியோ இருந்தது. அதிலிருந்து வெளிவந்த லதா மங்கேஷ்கரின் தீஞ்சுவை குரலிலான பாடல்கள் இருந்தன. அவற்றைக்கேட்டும், பாடியும் ஜானகி தன்னை வளர்த்துக்கொண்டார். ஜானகிக்கு அப்போது பன்னிரண்டு வயது கூட இருக்காது. 'மஹால்' படத்தில் ‘ஆஜாரே பர்தேஸி‘ என்று என்னமாய் ஒலித்தது லதாவின் ஜாலம்! அதில்தான் வளர்ந்தது ஜானகியின் காலம்! இந்த எடுப்பின் அழகை, ஆரம்பகாலத்தில் இளையராஜா இசையமைத்த ‘அலையே கடல் அலையே’ என்ற பாடலில் கேட்கலாம். 'திருக்கல்யாணம்' என்ற 1978ம் ஆண்டு படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை ஜெயச்சந்திரனுடன் ஜானகிதான் பாடினார்!

இளம் ஜானகி மேடைகளில் பாடி தன்னுடைய திறமையை வளர்த்து வந்தார். அப்போது, காந்தியாக, நேருவாக, தாகூராக கண நேரத்தில் வேடம் மாற்றி, மேடையில் தோன்றி மக்களை அசத்திக்கொண்டிருந்த சந்திரசேகரம் என்பவரின் கவனம் ஜானகி மீது விழுந்தது. தன்னுடைய நிகழ்ச்சியில் பாடும்படி அவர் ஜானகியைக் கேட்டுக்கொண்டார். பிறகு அவர்தான் தன் குடும்பத்துடன் ஜானகியை சென்னைக்கு அழைத்து வந்தார். அவரால்தான் ஏவி.எம். நிறுவனத்தின் கம்பெனி பாடகியாக ஜானகி சேர்ந்தார். ஆரம்ப காலத்தில் ஜானகி திரை உலகில் வலம் வருவதற்கு அவர் ஒரு காரணமாக இருந்தார். சந்திரசேகரத்தின் மூத்த மகனான ராம்பிரசாத் என்பவரை ஜானகி மணந்தார். தென்னக சினிமாக்களில் பல்லாயிரம் பாடல்கள் பாடி புகழை ஈட்டிய ஜானகி, தான் ஈட்டிய செல்வத்தால் சந்திரசேகரத்தின் பெரிய குடுமபத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் செழிப்படையும்படி செய்து அவர்களுக்கு அன்னபூரணியாக விளங்கினார்.

‘விதியின் விளையாட்டு’ என்ற படத்தில், சலபதி ராவின் இசையில் முதன் முதலாக திரைப்பாடல் பாடினார் ஜானகி. ஆனால் அந்தப் படம் வெளிவரவேயில்லை. அடுத்த நாளே ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்குப் படத்தில், பெண்டியாலா நாகேஸ்வர ராவின் இசையில், பிரபல பின்னணிப்பாடகர் கண்டசாலாவுடன் பாடினார் ஜானகி. எடுத்த எடுப்பிலேயே சேர்க்கைகளைப் பாருங்கள். தமிழில் ஜானகிப் பாடி வெளிவந்த முதல் பாடல், ‘கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை’ ('மகதலநாட்டு மேரி' 1957). இதில் ஜானகி, பி.பி.ஸ்ரீநிவாஸ் என்ற இணைவை  ஆரம்பித்துவைத்தார் இசையமைப்பாளர் ஆர். பார்த்தசாரதி. ஜானகியின் முதல் அத்தியாயத்தில் இந்த இணைவு சில ரம்மியமான பாடல்களைத் தந்தது. 'மலரோடு விளையாடும் தென்றலே வாராய்' ('தெய்வபலம்' 1959), 'தென்னங்கீற்று ஊஞ்சலிலே' ('பாதை தெரியுது பார்' 1960) ஆகிய பாடல்கள் இதில் அடங்கும். இதுவே எம்.எஸ்.வி.ராமமூர்த்தியின் மெல்லிசை அலையில், 'பூஜைக்கு வந்த மலரே வா'வென்றும் ('பாத காணிக்கை'), 'மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில்' என்றும் ('பாசம்'), 'மாம்பழத்து வண்டு' என்றும் ('சுமைதாங்கி'), 'அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை' என்றும் ('நெஞ்சம் மறப்பதில்லை') பலவிதமாக மணம் கமழ்ந்தது. சுருதி குறைந்த மென்மையான ஓர் ஆண்குரலும், இழுத்துக்கட்டிய கம்பிபோல் சன்னமாக ஒலிக்கும் ஒரு பெண்குரலும் இணையும்போது கிடைக்கும் அபூர்வ இனிமைகள் இந்த பாடல்களில் இழைந்துகிடைக்கின்றன.

பொதுவாக மற்றவர் செய்ய முடியாததை ஒருவர் செய்துகாட்டினால்தான் மக்கள் மதிப்பார்கள். தமிழ்நாட்டில் இந்த குணம் அதிகம். தலைகீழாக நடந்துவந்தால் தலைகால் தெரியாமல் கிளாப்ஸ் பிச்சுக்கும். அதுபோல், ‘சிங்கார வேலனே தேவா’வைப் பாடினார் ஜானகி. ஏற்கனவே காருகுறிச்சி அருணாசலம் வாசித்த நாயனத்திற்கு ஏற்ப பாடவேண்டும். அசாத்திய சுருதி. எக்கச்சக்கமான  ஸ்வரக் கல்பனைகள். அமர்க்களப்படுத்திவிட்டார் ஜானகி. சங்கீத பலத்தில் ராட்சஸி! அவருக்கு கஷ்டமான இசையும் ஒரு தடையல்ல. மொழியும் ஒரு தடையல்ல. அறுபதுகளில் மலையாளத்தில் பாட ஆரம்பித்த ஜானகி, எழுபதிலிருந்து கேரள மாநில விருதுகளை வாங்கித்தள்ளினார். வி. தட்சிணாமூர்த்தி, தேவராஜன், எம்.பி.சீனிவாசன் என்று பல இசையமைப்பாளர்களுக்கு ஜானகி பாடினாலும், எம்.எஸ்.பாபுராஜின் இசையில் அவருக்கு ஒரு குறிப்பிட்ட நயமான நாதவட்டம் கிடைத்தது. ‘பார்கவி நிலையம்’ (1964) என்ற ‘ஆவி’ படத்தில் அவர் பாடிய ‘வசந்த பஞ்சமி நாளில்’ என்ற பாடல் இதற்கான சிறப்பான ஓர் எடுத்துக்காட்டு. தனது தாய்மொழியான தெலுங்கில் ஜானகி எத்தனையோ சிறந்த பாடல்கள் பாடினார். கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில் வந்த ‘சப்தபதி’ என்ற படத்தில் ‘நெமலிகி நேர்பின நடகலவி’ என்ற வேடுரி சுந்தரராமமூர்த்தியின் அற்புதமான பாடலுக்கு ஜானகி தந்த கிளாசிக்கல் நாதம் மிகச் சிறப்பானது (இசை– கே.வி.மகாதேவன்). இதே படத்தில் வரும் ‘கோவுல்ல தெல்லனா’ என்ற பாடலில் ஜானகியின் நாதம் நாட்டுப்புற சங்கீதத்தின் மணத்தை அள்ளி சொரிகிறது. இப்படி மாறுபட்ட சங்கீத வல்லமைகள் ஜானகியிடம் இருந்தன.

எஸ்.பி.பியுடனான ஒரு நயமான இணைவு ஜானகிக்கு ஆரம்பத்திலேயே ஏற்பட்டது. இதற்கான அச்சாரப் பாடல்கள், 'பவுர்ணமி இரவில்' ('கன்னிப்பெண்'), 'தேன் சிந்துதே வானம்' ('பொண்ணுக்குத் தங்க மனசு') போன்றவை. இப்படி தொடங்கிய அத்தியாயம், பல நூறு பாடல்களாக விரிந்தது.

‘தேன் சிந்துதே வானம்’ தந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராக இருந்த ராசையா இளையராஜாவான போது, புதிய இசை ராஜாங்கத்தின் பிரதான குரலாக ஒலித்தார் ஜானகி. ‘மச்சானைப் பாத்தீங்களா’ என்று 'அன்னக்கிளி'யில் அவர் கேட்ட கேள்வி, திரை இசையின் ஒரு புதிய முகவரியைக்காட்டியது. ‘செந்துாரப்பூவே செந்துாரப்பூவே’ என்று சென்னையில் ஜானகி எழுப்பிய நாதம், டில்லி வரை சென்றது. அவருக்கு தேசிய விருதை வாங்கி வந்தது. இதுபோல் நான்கு முறை அவர் பெருமைப்படுத்தப்பட்டார். ‘ஊரு சனம் தூங்கிடுச்சி’ என்று பாடி, பலரை தூங்கவிடாமல் செய்தவர் ஜானகி. சித்ராவை இளையராஜா அறிமுகப்படுத்தும் வரை, ஜானகியின் நாதம்தான் அவரிடம் அதிகம் முழங்கியது.  

ஏ.ஆர். ரஹ்மானும் ஜானகிக்குப் பொருத்தமான சில பாடல்களை உருவாக்கினார் (உதாரணத்திற்கு, 'ஒட்டகத்தை கட்டிக்கோ', 'மார்கழித் திங்கள் அல்லவா'). குழந்தைக் குரல், குமரிக்குரல், கிழவிக் குரல், ஆண் குரல் என்று எதையும் பாடிவிடக்கூடிய வல்லமையுள்ள ஜானகி, இப்போது பாட்டை நிப்பாட்டுகிறேன் என்று சொல்கிறார் என்றால்,   சங்கீதம் என்ற வாக்கியத்திற்கு ஓர் அரைப்புள்ளி போடுகிறார் என்றுதான் பொருள். பாட்டு வெள்ளத்தில் நீந்தி வரும் ஒரு மீன், நீரைவிட்டு வெளியே வருவது சாத்தியம் இல்லை. சங்கீத மேடையில் ஜானகி வலம் வருகிறாரோ இல்லையோ, அவருக்குள் சங்கீதம் வலம் வந்து கொண்டுதான் இருக்கும்.

(தொடரும்)