ஒரு பேனாவின் பயணம் – 133 – சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2017

காத்திருந்தார் இந்திரா காந்தி!

ஒரு கைதேர்ந்த தையல் கலைஞரைப் போல அரசியல் துணியை நெய்து கொண்டிருந்தார் இந்திரா காந்தி. எதிர்கட்சிகளின் ஒவ்வொரு பலத்தையும், பலவீனத்தையும் அவர் பார்த்துக்கொண்டேயிருந்தார்.

அவர் நினைவுக்கூட்டிலிருந்து ஜனதா தலைவர்களின்  குணாதி சயங்களை எடுத்துக்கொண்டிருந்தார் இந்திரா காந்தி. அதில் பல பேர் பிரியாத காங்கிரஸில் அவருடன் இருந்தவர்கள். இந்திரா காந்திக்கு பல நல்ல, கெட்ட குணங்கள் இருந்தாலுமே, அவர் ஒரு சரியான அரசியல் போராளி. இப்போது அவரது போராட்ட குணங்கள் சாதுரியமாக வெளிப்பட ஆரம்பித்தன. அவரது செயல்களை மிக ரகசியமாக வைத்திருந்தார்.

தன் மூச்சுக்காற்றின் வெளிப்பாடு கூட மொரார்ஜி, சரண்சிங்கிற்கு தெரியக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார் இந்திரா காந்தி. அவரது உள்ளார்ந்த, வெளிசார்ந்த வெளிப்பாடு களும் அப்படியே இருந்தன.

அந்த வருட ஜனவரி மாதத்திலிருந்தே அவர் துணைப் பிரதமராக இருந்த சரண்சிங்குடன் ரகசிய தொடர்புகளை வைத்திருந்தார். பதவி ஆசை என்கிற சரண்சிங்கின் பேராசையை பயன்படுத்திக்கொள்ள நினைத்தார் இந்திரா.

அவரது மகன் சஞ்சய் காந்தி இந்திராவை ரேய்பரெய்லி தொகுதியில் தோற்கடித்த ராஜ்நாராயணனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். ராஜ் நாராயணன் ஒரு கைதேர்ந்த அதே சமயம் சுயபெருமை கொண்ட ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி.

ராஜ்நாராயணன், ஒரு முன்னாள் குத்துச்சண்டை வீரர். அவரது அரசியல் செயல்பாடுகள் அந்த குத்துச்சண்டை மேடையில் லாவகம் போல்தான் இருக்கும். எதிலும் நேரடி தாக்குதல்தான் அவருக்குத் தெரியும்.

அவர் மூலமாக சரண்சிங் பிரதமரானால், காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்கிற ஆசையை விதைக்க ஆரம்பித்தார் சஞ்சய் காந்தி. ஒரு சமயத்தில் `ஏன் நீங்கள் பிரதமரானால் கூட காங்கிரஸ் ஆதரிக்க தயார்' என்கிற பதவி போதையையும் ராஜ்நாராய ணனுக்கு தெளித்தார் சஞ்சய் காந்தி.

அந்த போதையில் லேசாக கிறங்கவும் ஆரம்பித்தார் ராஜ்நாராயணன். அவர் அடுத்த கட்டத்திற்கு தயாரானார். ஜனதா கட்சியில் இருந்து கொண்டே பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிக்க ஆரம்பித்தார். மொரார்ஜி தேசாயின் மகனை கண்டிக்க துவங்கினார். மொரார்ஜியின் மகன் ஒரு ஊழல் பெருச்சாளி என்று சொல்ல ஆரம்பித்தார்.

அவர்களின் கூட்டணியில் இருந்த ஜனசங்கத்தை ( இப்போதைய பாரதிய ஜனதா) கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தது சரண்சிங் அணி. இதனால் ஆளும் ஜனதா கட்சி இந்திராவை மறந்து, தமது உட்கட்சி விவகாரங்களில் கவனம் செலுத்த துவங்கியது.

இந்த பக்கம் சஞ்சயின் அரசியல் விளையாட்டு நடந்து கொண்டிருக்கும்போதே, இன்னொரு பக்கம் இந்திரா இன்னொரு காயை நகர்த்திக்கொண்டிருந்தார். அவரது கட்சியின்  உத்திரபிரதேச முதல்வராக இருந்த ஹேமாவதி நந்தன் பகுகுணாவுடன் இந்திரா நெருங்க துவங்கினார். ஹேமாவதி ஜனதா அரசின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்தார்.

ஹேமாவதி  மிகச் சிறந்த புத்திசாலி, அதே சமயம் மிகவும் பதவி ஆசை கொண்ட அரசியல்வாதி. பகுகுணாவும், இந்திரா காந்தியும் ரகசியமாக பர்காம்பா சாலையிலிருந்த ஒரு வீட்டில் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.  ஜனதா அரசு கவிழ்வதற்கான மேடை தயாராகிக் கொண்டிருந்தது. அதே சமயம் இந்திராவுக்கு எதிரான நடவடிக்கைகளும் கூடவே நடந்து கொண்டிருந்தன. குடியரசுத் தலைவராக இருந்த சஞ்சீவ ரெட்டி இந்திரா வழக்குகளை விசாரிக்க விசேஷ நீதிமன்றம் அமைப்பதற்கான மசோதாவிற்கு 1979 மே மாதம் 17ம் தேதி   ஒப்புதல் அளித்தார்.

இந்த விசேஷ நீதிமன்றம் ஜூன் 14ம் தேதியிலிருந்து செயல்பட துவங்கும் என்ற அறிவிப்பு வெளியாக இருந்தது. இந்த செய்தி உளவுத்துறையில் இந்திராவுக்கு விசுவாசிகளாக இருந்தவர்கள் மூலமாக இந்திராவை எட்டியது.

இந்த சிறப்பு நீதிமன்றம் இந்திராவுக்கு சம்மன் அனுப்பப்போவதாகவும் தகவல் வந்தது. இந்திரா உடனடியாக அப்போது தனக்கு பிரியமானவளாக இருந்த சஞ்சய்யின் மனைவி மேனகாவுடன் டார்ஜீலிங்கிற்கு ஒரு வார ஓய்வு பயணம் கிளம்பினார்.

 இந்த பயணத்தை திசை திருப்ப சஞ்சய் காந்தி கோல்கட்டாவிற்கு பயணமானார். அங்கே பேரணிகளுக்கு ஏற்பாடு செய்தார். உரக்க வீதி முழுக்க கோஷம் எழுப்பினார். செய்திகளின் கதாநாயகனாக பல செயல்பாடுகளில் இறங்கினார். இந்த பேரணிகளில் தடியடிகள் நடந்தன. அவரே கூட காயப் பட்டார்.

பிறகு சத்தமில்லாமல் தன் தாய், மனைவியுடன் ஓய்வெடுக்க ரகசியமாக டார்ஜீலிங் கிளம்பிப் போனார். விசேஷ நீதிமன்றத்தின் சம்மன் மட்டும் ரகசிய பயண இடமான டார்ஜீலிங்கிற்கே பயணமானது.

 இந்திரா திரும்ப வந்து கோல்கட்டா நீதிமன்றத்தில் இந்த சம்மனுக்கு எதிராக மேல் முறையீடு செய்தார். சம்மனுக்கு தடை வாங்க நினைத்தார். கோல்கட்டா நீதிமன்றம் அவரது மனுவை ஏற்றுக்கொண்டது. சம்மனுக்கு தடையும் வழங்கியது.

 மேனகாவும், சஞ்சய் காந்தியும் இந்த தடையுத்தரவின் நகலை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் டார்ஜீலிங் பயணத்தில் ஒரு மகிழ்ச்சியான முன்னேற்றம் நடந்தது. இந்திரா காந்தி டார்ஜீலிங்கை சுற்றிப் பார்க்க தனியாக கிளம்புவார். அந்த நேரம் சஞ்சய் தம்பதிக்கு இன்னொரு தேனிலவாக அமைந்தது. மேனகா இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்தார்.

டில்லி திரும்பியதும் மேனகா கர்ப்பம் என்பது குடும்பத்தினருக்குத் தெரிந்தது. இந்த அரசியல் சூறாவளிக்கு நடுவே குடும்பத்தில் இன்னொரு பிரசவம் தேவையா என்கிற கேள்வியும் எழுந்தது. ஆனால் இந்திரா, மீண்டும் பாட்டி ஆவதை நினைத்து குதூகலம் அடைந்தார். அவர் தன் அரசியல் சிக்கல்களை எல்லாம் மறந்தார். இந்த நல்ல செய்தியை தன் இன்னொரு மருமகளான சோனியாவிடம் சொல்ல ஓடினார்.

அதே சமயம் சோவியத் யூனியன் சென்று திரும்பியிருந்தார் பிரதமர் மொரார்ஜி. அங்கே அவருக்கு கிடைத்த வரவேற்பில் மயங்கிப் போயிருந்தார் அவர். உள்நாட்டுக் குழப்பங்களை எல்லாம் மறந்தார்.

இங்கே அரசியல் காட்சி படுபாதாளத்தில் இருந்தது. பருவநிலையோ மோசமடைந்திருந்தது.  விலைவாசிகளோ கடுமையாக உயர்ந்து கொண்டிருந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருந்தன. தினமும் ஒரு வரதட்சணைக் கொடுமை சாவுகள் நாளிதழ்களில் வெளியாகிக் கொண்டிருந்தன.

பல பொதுத்துறை நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் இருந்தன. அலிகாரில் ஜாதி மோதல்கள். மின்சாரத் தட்டுப்பாட்டினால் நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனாலும் 83 வயதான பிரதமர் மொரார்ஜி தேசாய் கவலைப்படாமல் இருந்தார்.

யதார்த்த நிலையை விட்டு வெகுதூரம் விலகிப் போயிருந்தார் பிரதமர் மொரார்ஜி. அவரது ஆலோசகர்கள் நிலைமையை விளக்கினாலும் அதற்கு அவர் செவிசாய்ப்பதாக இல்லை.

பருவகால பார்லிமென்ட் கூட்டத்தொடர் ஜூலை மாதம் துவங்குவதாக இருந்தது. `வானமே இடிந்து விழுந்தாலும் நான் அசரமாட்டேன்’ என்று செய்தியாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார் மொரார்ஜி.

ஜனதா கட்சியின் உள்ளுக்குள் நடக்கும் கொந்தளிப்பு தெரியாமலே எதிர் கட்சி தலைவரான ஒய். பி. சவான் ஜூலை 11ம்தேதி பார்லிமென்ட்டில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஜனதா அரசு அமைந்த பிறகு முதன்முறையாக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் இது.

ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த ஜனதா கட்சியில் இது பல்வேறு உட்கட்சி பனிப்போர்களை துவக்கியது.

ஜூலை 13ம் தேதிதான் பிரதமர் மொரார்ஜி விழித்துக் கொண்டார். தன் அமைச்சரவையிலிருந்த எந்த மூத்த அமைச்சர்களும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து கடுமையாக பேசவில்லை என்பதை புரிந்து கொண்டார்.

`துணை பிரதமர் பதவியிலிருந்து விலகிவிடுங்கள்’ என்று ராஜ்நாராயணனின்  வற்புறுத்தலுக்குப் பிறகும், பதவி விலக தயக்கம் காட்டிக்கொண்டிருந்தார் சரண்சிங்.

அதற்கும் காரணம் இருந்தது. சரண்சிங்கின் ஆஸ்தான ஜோசியர்கள், அவருடைய ராசி பலன்கள் அவரை உயர்ந்த இடத்தில் கொண்டு போய் வைக்கப்போவதாக ஆரூடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பார்லிமென்ட் உள்வளாகத்தில் களேபரமும், ரகசிய பேரங்களும் நடந்து கொண்டிருந்தன.

ஜூலை 14ம்தேதி, ஜனதா கட்சியின் பார்லிமென்ட் குழு மொரார்ஜியை பதவியை விட்டு இறங்க கோரியது. ஆனால் மொரார்ஜி மறுத்துவிட்டார். இந்த கூட்டத்தில் சரண்சிங் கலந்து கொள்ளவில்லை.

 ஜூலை 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஜனதாவிலிருந்த சோஷலிச குழு, உதாரணமாக ஜார்ஜ் பெர்னாண்டஸ், மதுலிமாயி. மிருணால் கோர், பகுகுணா, ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தார்கள்.

மொரார்ஜியின் பெரும்பான்மை பலம் உருகத் துவங்கியது. தன் பலத்தை நிரூபிக்க முடியாமல் ஜூலை 15ம்தேதியே மொரார்ஜி தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இப்போது தேசத்தின் கவனம் குடியரசுத் தலைவர் மாளிகை பக்கம் திரும்பியது. இன்னொரு தேர்தலை அறிவிப்பதா, அல்லது ஜனதா கட்சியிலிருந்த மூத்த தலைவர்களான ஜெகஜீவன்ராம் அல்லது சரண்சிங்கை பிரதமராக்குவதா என்பது சஞ்சீவ் ரெட்டியின் சட்டைப்பைக்குள் இருந்தது.

பத்திரிகைகளில் பல யூகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்திரா நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டி ருந்தார். `சிங்கமாக கர்ஜித்துக்கொண்டி ருந்த ஜனதா அரசு, இப்போது எலி போல் முனகிக்கொண்டிருக்கிறது’ என்றார் இந்திரா காந்தி.

ஜூலை 27ம் தேதி சரண்சிங் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டார். ஒய்.பி. சவான் தலைமையிலான காங்கிரஸ் (எஸ்) ஆதரவுடன் அரசு அமைக்க அவருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தன் பலத்தை உறுதிபடுத்திக்கொள்ள 70 உறுப்பினர்களைக் கொண்ட இந்திரா காங்கிரஸின் ஆதரவையும் சரண்சிங் நாடினார். முக்கிய கொள்கை முடிவுகளை தங்களை கலந்தாலோசித்து எடுப்ப தானால் ஆதரவு உண்டு என்றது இந்திரா காங்கிரஸ்.

ஒரு மாதத்திற்குள் பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டு மென்றார் ஜனாதிபதி.

பின்னாலிருந்து எல்லாவற்றையும் கவனமாக பார்த்துக்கொண்டிருந்தார் இந்திரா காந்தி. இந்திராவின் அமைச்சரவையில் எமர்ஜன்சி காலத்தில் உடனிருந்த மூத்த அமைச்சர்கள் மீண்டும் இந்திராவுக்கு துரோகம் செய்ய ஆரம்பித்தார்கள். சரண்சிங்கின் அழைப்பிற்காக காத்திருந்தார்கள். பதவி ஆசை கொண்ட இவர்கள் இந்திராவின் கருணையினால்தான் புதிய ஆட்சி மலரப்போகிறது என்பதை அடியோடு மறந்து போனார்கள்.

இதற்கு ஒரு சாட்சியமும் உண்டு. இந்திராவுடன் இருந்த டாக்டர். கரண்சிங் புதிய பிரதமரின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார். காரை விட்டு இறங்குகிறார். அவருக்கு பின்னால் காரில் புதிய பிரதமர் சரண்சிங்கின் புகைப்படம். இந்த படம் எல்லா நாளிதழ்களிலும் வெளிவந்தது.

புதிய அமைச்சரவை அமைந்தது. ஒய்.பி. சவான் துணை பிரதமரானார். சி.சுப்ரமணியம், பிரம்மானந்த ரெட்டி, ஹெச். என். பகுகுணா, கரண்சிங், டி.ஏ. பாய், கே.சி. பந்த்.  இந்திரா காங்கிரஸின் பழைய அமைச்சர்களெல்லோரும்  மூத்த அமைச்சர்களானார்கள்.  

இந்திராவின் ஆதரவால் சரண்சிங் அமைச்சரவை உருவானது. ஜனதா கட்சியின் முதுகில் குத்திய ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிஜூபட்நாயக், எஸ். என் மிஸ்ரா ஆகியோரும் அமைச்சர வையில் இடம்பெற்றார்கள்.

இப்போது இந்திரா காந்தியின் கையில் சரண்சிங் ஆட்சி இருந்தது. அப்போது அவருடைய நெருங்கிய சகாக்களுக்கு இந்திரா ஒரு கடிதம் எழுதினார்.

`வெளிப்படையாகப் பார்த்தால், துன்புறுத்தல், சிறை அச்சுறுத்தல், மரண எச்சரிக்கை, எல்லாமே ஒரு தொந்தரவுதான். ஆனால் அவையெல்லாம் ஒரு உண்மையான பதட்டத்தை ஏற்படுத்தவில்லை. அவை எப்படி தனிப்பட்ட முறையில் நம்மை பாதிக்கிறது என்பதே முக்கியம். உள்மன சாந்தம், கலையாத தன்மை இருப்பதுதான் இந்த நேரத்தில் முக்கியம்’ என்று எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தின் இன்னொரு பக்கம் இந்திராவின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியது. தலைமைப் பண்புகளின் குணநலன்களையும் எடுத்துக் காட்டியது.

 அதில் சொல்கிற அடுத்த வாசகங்கள் நெஞ்சத்தை தொடுவதாக இருந்தன.

`என் வாழ்க்கை முழுவதும் பல மக்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் என் தந்தை மீது காட்டிய அபிமானம், அவர்கள் காந்திஜியை தொழுததையும் கண்டிருக்கிறேன். ஆனால் இப்போது என் மீது ஒரு பாதுகாக்கும் உணர்வோடு, ஒரு சொந்தமான பாசத்தோடும், அன்போடும் அவர்கள் என்னை பார்ப்பது நெகிழ வைக்கிறது. பல்லாயிரக்க ணக்கான மக்களுக்கு நடுவே நான் திறந்த ஜீப்பில் செல்லும்போது, அங்கே கூடியிருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கண்களில் ஒரு பாச ஒளியைக் காண்கிறேன். என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.  நான் அப்படியே குறுகி ` கடவுள் அவர்களை ரட்சிக்கட்டும்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இது கொஞ்சம் பத்தாம்பசலித்தனமான, பிற்போக்கு சிந்தனையாக தோன்றலாம். ஆனால் இதைத்தவிர, எந்த தலைவர்களாலும் அந்த மக்களின் அன்பை திரும்ப செலுத்த முடியாது. அவர்களின் அன்பை எந்த பணத்தாலோ, அதிகாரத்தாலோ ஈடு செய்து விட முடியாது. அந்த அன்பிற்கு விலை என்பதே கிடையாது. அதனை மதிப்பிடவே முடியாது’ என்கிறார் இந்திரா.

அதே சமயம், தான் இருக்கும் தர்மசங்கடமான பதவியைப் பற்றி சரண்சிங் உணரவேயில்லை. அதே போல் அவரது அமைச்சரவையில் இருந்த காங்கிரஸ் அமைச்சர்கள் இந்திராவின் தயவால்தான்  இந்த பதவியிலிருக்கிறோம் என்பதை மறந்து போனார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் தான் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற அசாத்திய துணிச்சலில் இருந்தார் சரண்சிங். இடதுசாரிகளிடமிருந்தும் தனக்கு ஆதரவு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கொண்டிருந்தார்.

அதே சமயம் இந்திராவின் ஆதரவு என்பது விசேஷ நீதிமன்ற விவகாரத்தைப் பொறுத்ததுதான் என்பதை சரண்சிங் உணரவில்லை. அவர் பிரதமராக இருந்த இருபத்தி மூன்று நாட்களில் நாட்டை எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளின் தீவிரத்தை அவர் உணரவில்லை. விலைவாசிகள் உயர்ந்து கொண்டேயிருந்தன. அவருடைய பொதுக் கூட்ட பேச்சுக்களில் ஓர் ஆணவம் தொனித்தது. 'விசேஷ நீதிமன்றங்களின் மூலமாக இந்திராவை கூண்டில் ஏற்றுவேன்' என்றார்.

இந்திரா தருணத்திற்காக காத்திருந்தார்.

(தொடரும்)