வெங்காய விலை கிடு கிடு உயர்வு – இறக்குமதி செய்ய திட்டம்

பதிவு செய்த நாள் : 12 நவம்பர் 2017 23:45

புதுடில்லி:

தலைநகரான டெல்லியில் வெங்காய விலை சில்லரை மார்க்கெட்டில் கடுமையாக உயர்ந்துவருகிறது. இப்பொழுது 1 கிலோ வெங்காயம் 65 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த எகிப்து, சீனாவிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலோக மற்றும் தாதுப்பொருள்கள் வர்த்தக கார்ப்பரேஷனுக்கு வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 12.29 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

சென்ற 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரையிலான காலத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவு 7.88 லட்சம் டன்னாகும்.

நடப்பு 2017ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 56 சதவீதம் கூடுதலான அளவு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் மொத்த மதிப்பு 1443.09 கோடி ரூபாய் ஆகும்.

2016இல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள வெங்காயத்தின் மொத்த மதிப்பு 977.84 கோடி ரூபாய் ஆகும்.

இந்தியாவிலிருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதால் இந்திய விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. சர்வதேச சந்தையில் வெங்காய விலை கூடுதலாக இருந்ததால் நம்மால் ஏற்றுமதி செய்ய முடிந்தது.

இப்பொழுது, இந்தியாவில் புது வெங்காயம் சந்தைக்கு வருவதற்குள், சில்லரை விற்பனை நிலையங்களில் விலை உயர்வு காணப்படுகிறது. அதனால், வெங்காயம் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 1 டன்னுக்கு 11 ஆயிரத்து 737 ரூபாய் என்ற விலைக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்தது.

இப்பொழுது என்ன விலைக்கு வெங்காயத்தை இறக்குமதி செய்யப்போகிறது என்று தெரியவில்லை

மகாராஷ்டிரா, கர்நாடகம், மத்திய பிரதேசம், பீகார், குஜராத் ஆகியவை வெங்காயத்தை உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். இங்கு நடப்பு கரீப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 10 சதவீதமாக குறைவாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். ஏனெனில், வெங்காயம் பயிர்செயயும் வழக்கமான நில அளவ இந்த முறை குறைந்துவிட்டது. 30% குறைவான இடத்தில்தான் இந்த முறை வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.