பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை!’ – 8

பதிவு செய்த நாள் : 12 நவம்பர் 2017

இந்த சமயத்தில்தான் ஸ்ரீதர் அசோகா பிரதர்ஸ் என்ற கம்பெனிக்கு ஒரு கதை சொன்னார். அந்த நிறுவனத்தில் மூன்று தயாரிப்பாளர்கள் இருந்தனர். அவர்களுக்கு ஸ்ரீதர் சொன்ன கதை பிடித்துப் போய் உடனடியாக அதை படமாக எடுப்பது என்று முடிவு செய்தார்கள்.

 அந்த கதையின் தலைப்பு `பெண் தெய்வம்’. ( இதே தலைப்பில் பின்னர் தேவர் பிலிம்ஸ் ஒரு படம் எடுத்து வெளியிட்டது) முதலில் இந்த கதை பிடித்திருக்கிறது என்று சொன்ன தயாரிப்பாளர்கள், கடைசி நேரத்தில் இந்த கதையை எடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்கள்.

அதற்குக் காரணம் கதை ஆன்டி சென்டிமெண்ட் ஆகிவிடுமோ என்று அவர்கள் பயந்தார்கள்.

அது என்ன ஆன்டி சென்டிமெண்ட்  ?

ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்பே அவள் தன்னை காதலனிடம் இழந்துவிடுகிறாள். அதன்பின் காதலன் அவளை விட்டு விலக ஆரம்பிக்கிறான். அவனது மனமாற்றத்தின் காரணத்தை அவன் சொல்ல மறுக்கிறான். அது அவளை வெகுவாக பாதிக்கிறது.

மனக்கலக்கத்துடன் ஒரு நாள் அவள் காரை ஓட்டிச் செல்கிறபோது, எதிரே காதலன் வருவது கண்டு நிலை தடுமாறுகிறாள். கார் அவன் மீது மோதுகிறது. அப்போதுதான் அவனுக்கு தீராத வியாதி இருப்பதும், அதன் காரணமாய், தனது காதலியின் வாழ்க்கையை பாதிக்க விரும்பாமல், அவளைவிட்டு அவன் விலகியிருக்கிறான் என்ற உண்மையும் அவளுக்குத் தெரிய வருகிறது.

 இதற்கிடையே, தந்தையில்லாத காதலியின் அண்ணன், அவளது காதலை பற்றி தெரியாமல், அவளுக்குத் தன் நண்பனைத் திருமணம் பேசி முடிக்கிறான். அவர்களுடைய தாய் இறக்கும்போது, தங்கைக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்துவிட்டுத்தான் நீ திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிறாள். வேறு வழியின்றி தன் அண்ணனின் நல்வாழ்க்கைக்காக, அண்ணனின் நண்பனைத் திருமணம் செய்து கொள்ள அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

 திருமணம் நடக்கிறது. திருமணத்துக்கு முன்பே வேறொரு ஆடவனிடம் தன்னை இழந்துவிட்டதால், தன் கணவனுடன் குடும்ப வாழ்வில் ஈடபடாமல் அவள் தவிக்கிறாள்.

இறுதியில், தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் ஒரு பெண். திருமணத்துக்கு முன் ஒருவனிடம் தன்னை இழப்பது, வேறொரு ஆணைத் திருமணம் செய்து கொள்வது, தற்கொலை இவையெல்லாம், `பெண் தெய்வம்’ கதைக்கு எதிர்மறையான சென்டிமெண்ட் முத்திரையைப் பெற்றுத் தந்தன.

'ரத்தபாசம்', 'எதிர்பாராதது', இரண்டு படங்களும் நன்றாக ஓடிய பிறகும், ஸ்ரீதர் அடுத்த வாய்ப்பிற்காக நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சரியாக நான்கு மாதங்கள் கழித்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸாரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பே வித்தியாசமாக இருந்தது. முதலில் ஒரு தந்தி வந்தது.. பிறகு அவர்களுடைய சென்னை பிரதிநிதி ரயில் டிக்கெட்டுடன் வந்துவிட்டார். `சேலம் ரயில் நிலையத்தில் கார் வந்து அழைத்துப் போகும்’ என்றார்.

 சொன்னபடியே எல்லாம் நடந்தது. அங்கே நல்ல வரவேற்பு. போவதற்கு முன்பே இவருக்காக ஓர் அறை. மேஜை. நாற்காலி, மின்விசிறி, வேளா வேளைக்கு சாப்பாடு. என்ன வேலை? அதுதான் ஸ்ரீதருக்குப் புரியவில்லை.

 மாலை ஆறு மணி சுமாருக்கு பாலு முதலியார் ( டி.ஆர். சுந்தரத்தின் சகோதரர்) கூப்பிட்டு அனுப்பினார். `ஒரு வங்காள நாவல் இருக்கு. அதை அடிப்படையாக வைத்து, சினிமா கதை, வசனம் எழுதணும். என்ன எதிர்பார்க்கிறீங்க ?’ என்றார்.

`ரத்தபாசம்' படத்துக்கு நாலாயிரம் வாங்கினேன். 'எதிர்பாராதது' படத்திற்கு ஐயாயிரம் வாங்கினேன். இப்போ ஆறாயிரம்' என்றார் ஸ்ரீதர்.

 `இரண்டாயிரத்துக்கு விருப்பமிருந்தா எழுதுங்க! விருப்பமில்லேன்னா சென்னைக்கு டிக்கெட் வாங்க சொல்றேன்’ என்றார் உறுதியாக.

 அவர் நறுக்கென்று பேசியது ஸ்ரீதருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டார். `கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’ என்றார்.

`இது தன்மானப் பிரச்னையா?’ யோசித்தார் ஸ்ரீதர்.

 அப்போது ஸ்ரீதருடைய நண்பர் ஜெமினி கணேசனோடு நாராயணன் கம்பெனிக்கு போன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. ஜெமினி சொன்னார். `நாராயணன் கம்பெனி போன்ற நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்வது நல்லது. அங்கே பட்டண்ணாதான் எல்லாம். அவரை அறிமுகம் செய்து வைக்கிறேன்’ என்றார்.

 அப்படியே அழைத்துப் போனார். அறிமுகம் முடிந்ததும், பட்டண்ணா சொன்னார். `கதை, வசனம் எழுத ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது. எந்தக் காட்சியிலாவது நாங்க வசனத்தை மாத்தணும்னு சொன்னா மாத்தித் தரணும்.’

 அது நியாயமான கோரிக்கை என்பதால் ஸ்ரீதரும் ஒப்புக்கொண்டார்.

 அடுத்ததாக `தினமும் நீங்கள் அலுவலகத்துக்கு வரணும்’ என்றார் பட்டண்ணா.

 உடனே ஸ்ரீதர், `மன்னிக்கணும் சார். கதை, வசனம் எழுதித்தரத்தான் வந்திருக்கேன். குமாஸ்தா உத்தியோகம் பாக்க வரலே.  நடு இரவில் எழுதுவேன். பகலில் தூங்குவேன். சொல்ல முடியாது. குறிப்பிட்ட அலுவலக நேரம் என்பது எனக்கு சரிப்பட்டு வராது.

இதை பட்டண்ணா எதிர்பார்க்கவில்லை. உடனே ஸ்ரீதரை கத்தரித்தாற்போல் வெட்டிவிட்டார். ஓர் அருமையான வாய்ப்பை இழுந்துவிட்டதாக ஜெமினி கணேசனுக்கு ஸ்ரீதர் மீது வருத்தம்.

 அந்த சம்பவம் இப்போது ஸ்ரீதர் நினைவுக்கு வந்தது.  அன்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஆபீசுக்கு வரச் சொல்லி ஸ்ரீதரின் கிரியேட்டிவிட்டியை, கற்பனைத் திறனை சிறைப்படுத்தப் பார்த்தார்கள். அது தன்மானப் பிரச்னை. இப்போது மாடர்ன் தியேட்டர்ஸில் பணம். ஸ்ரீதர் எதிர்பார்த்ததை விட குறைவாகத் தருகிறேன் என்கிறார்கள். ஏற்பதா? வேண்டாமா? இதுவும் தன்மானப் பிரச்னைதானே?

 ஆனால், இங்கே விஷயம் கற்பனைத்திறனை கட்டுப்படுத்துவதாக இல்லை. பணம்தான் பிரச்னை. ஸ்ரீதருக்கு எப்போதுமே பணம் பிரதான விஷயமாக  இருக்கவில்லை. தன்னுடைய திறன் மதிக்கப்படுகிறதா என்பதே அவருக்கு பிரதானமாக இருந்தது.

பணவிஷயம் வெளியே யாருக்கும் தெரியப் போவதில்லை. ஸ்ரீதர் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு எழுதுகிறார் என்பதுதான் பேச்சாக இருக்கும். அதன் மூலம் பெரிய நிறுவனத்துக்கே எழுதும் எழுத்தாளர் என்கிற பெயரும் கிடைக்கும்.

 உடனே ஒப்புக்கொண்டார். தன் நிபந்தனைக்கு ஸ்ரீதர் உடன்பட்டதில் பாலு முதலியாருக்கு மகிழ்ச்சி.

`அட்வான்ஸ் எவ்வளவு வேணும்? கேட்டு வாங்கிக்குங்க’ என்றார்.

  இப்போது ஸ்ரீதர் முகத்திலும் ஒரு வித மகிழ்ச்சி. காரணம், அவர் பணத்தை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை. ` எனக்கு அட்வான்ஸ் எதுவும் வேண்டாம். இங்கே வந்து போகும்போது ஏற்படும் செலவுக்கு மட்டும் பணம் கொடுங்கள். பிறகு கழித்துக் கொள்ளலாம்’ என்றார்.                                        

(தொடரும்)