பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 12 –11–17

பதிவு செய்த நாள் : 12 நவம்பர் 2017

2018 மே மாதம் கார்ல் மார்க்ஸின்  200வது பிறந்த நாள் வருகிறது. இதை இடதுசாரிகள், பொதுவுடைமை சிந்தனையாளர்களின் விழாவாக பார்க்க முடியாது.

ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் சமூக சிந்தனை கொண்ட இளைஞர்களையெல்லாம் இழுத்தது மார்க்ஸின் சிந்தனைகள்தான்! இப்போது இளைஞர்கள் வேறு பாதைகளில் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மார்க்ஸை சரியாக இளைஞர்களின் மனதில் மார்க்ஸிஸ்டுகள் பதிவு செய்யவில்லையா? அல்லது முதலாளித்துவம் இந்த இளைஞர்களை பணத்தால் இழுத்துக்கொண்டுவிட்டதா என்பது விவாதத்திற்குரிய விஷயம்.

ஆனால் மார்க்ஸை பற்றி தெரிந்து கொள்வது நல்ல சிந்தனையாளர்களுக்கு அவசியம்.

மார்க்ஸை மேதை என்று போற்றுவோர் போற்றினர். பேதை என்று தூற்றுவோர் தூற்றினர். அவர் வாழ்க்கை வறுமை இருளிலே தட்டுத் தடுமாறி உருண்டு புரண்டு சென்று கொண்டிருந்தது.  வாழ்விலே அவரை விட தோல்வியை அனுபவித்தவர்களை,  துயரத்தின் அதல பாதாளத்தை கண்டவர்களை சரித்திரம் இன்னும் அடையாளம் காட்டவில்லை. ஆனால் அவர் யார்?

தீர்க்கதரிசிகள் கண்ட மெய்ஞ்ஞானத் துணிவுகள் எல்லாம் ஒரு நூற்றாண்டு கூட உயிருடன் நிற்கவில்லை. எத்தனையோ மத புருஷர்களும், மகான்களும் கண்ட மார்க்கங்கள் அவர்களுடனேயே மறைந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். வாழ்க்கையிலே அனுஷ்டான சாத்தியமாக கடைப்பிடித்து வெற்றி காணத்தக்க ஒரு `தத்துவத்தை’ உருவாக்கினார் ஒரு பேராசிரியர். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.

 மதாசிரியர்கள்  அளித்த போதனைகள் உள்ளத்தை தொட்ட போதிலும் வாழ்க்கையைச் சென்று தொடவில்லை. அத்தத்துவங்கள் பாமர மனிதனின் வாழ்விலே இரண்டறக் கலக்கும் மனப்பான்மை பெற முடியவில்லை. ஓரளவு பண்பாட்டை வளர்க்கவும், சிந்தனையைச் செம்மை செய்யவும் அவற்றால் முடிந்திருக்கக்கூடும்.

ஆனால் வாழ்க்கையின் அஸ்திவாரத்தை அந்த வாழ்க்கை எந்த நிலைகளின் மேல் தோன்றி வளர்ந்து கிளைத்து செழித்து நிற்கிறதோ, அந்த சமுதாயத்தின் அஸ்திவாரத்தோடு சேர்த்துக் குலுக்கிப் புரட்டிப் புதியதோர் நிலைக்குக் கொண்டு போகத்தக்க போதனைகளை அளித்தார் ஒரு பேரறிஞர். அவர்தான் கார்ல் மார்க்ஸ்.

 அவர் வாழ்ந்த காலத்தில் அவருக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் கிடைக்கவில்லை. அவரை வாழ்த்தி வரவேற்க மன்னர்களும், மண்டலாதிபதிகளும், மாபெரும் பிரபுக்களும், மகிமை பெற்ற சீமான்களும் வரவில்லை. பல்லக்கு,  பட்டா, விருதுகளோடு பாரோர் துதியும் பெறவில்லை அவர் தன்  வாழ்க்கைக் காலத்திலே!

ஆனால், அவர் வாழ்ந்த ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளேயே வல்லரசுகள் கிடுகிடுக்கும் வலியதோர் சக்தியை, புரட்சி சூறாவளியைக் கிளம்பி விட முடிந்தது.  புதியதோர் சமுதாயமே பிறந்து வளர்ந்து உரம்பெற்று நிற்கிறது அவருடைய போதனைகளின் அடிப்படையிலே.

நிலமண்டலத்திலே, பெரும்பாகம் அவருடைய தத்துவத்தின் உயிர் சின்னமாய் காட்சி அளிக்கத் தொடங்கிய காலங்கள் இருக்கத்தான் செய்தன. உலக அரங்கின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மார்க்ஸிய தத்துவத்தால் இன்று புதுவாழ்வு பெறத்துவங்கி விட்டனர்.

அத்தகைய மகத்தான சாதனையைச் செய்து முடித்த தத்துவங்களின் உயிர் மூலமாக வாழ்ந்தார் ஒரு மாமனிதர்! அவர்தான்  மார்க்ஸ்.

உலகம் முழுவதுமே அழிந்து போய், தனி ஒரு மனிதனே எஞ்சி நிற்கினும் அந்த மனிதனின் நினைவிலே நின்றொளிரக்கூடிய ஒரே மேதையின் உருவம் அவருடையதாகத்தான் இருக்கும் என்று பல அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள். அதில் பல அறிஞர்கள், அவர் போதனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்களும் உண்டு.

மார்க்ஸின் வாழ்க்கையை பற்றி நினைக்கும் பொழுது உள்ளம் குமுறுகிறது. வாழ்க்கையில் அதைவிடக் கடினமான துன்பங்களை யாரும் அனுபவித்திருக்க முடியாது. அத்தகைய துயரங்களைப் பற்றி கற்பனை செய்து பார்க்கக் கூடச் சிலறுக்கு முடியாமல் இருக்கலாம். சொந்த நாட்டிலே அவரால் வாழ முடியவில்லை. அந்த நாட்டின் பிரஜா உரிமையைக் கூடத் துறந்து விடவேண்டிய நிலை அவருக்கேற்பட்டது. அவர் எந்தெந்த நாட்டில் சென்று குடியேறினாரோ, அங்கெல்லாம் அமைதியான ஒரு நாள் பொழுது கூட வாழவிடாமல் ஆளும் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் போலீஸும் தொல்லை கொடுத்தன. மனைவியும், மக்களுமாக நாடு நாடாக அலைந்து கொண்டிருக்கையில் அவர்கள் அனுபவித்த வறுமையை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

கண்ணீரையும், ரத்தத்தையும் குழைத்து எழுத வேண்டிய வரலாறு.

அந்த வரலாற்றுக்குரிய வாழ்க்கைதான் அரசாங்கங்களையே துடைத்து அழித்து விட்டுப் புதிய அரசாங்கங்களை, புதிய சமுதாய அமைப்புக்களை காண அடிப்படையாக இருந்தது.

1818 மே 5ம்தேதி மார்க்ஸ் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு வக்கீல். யூதர். வாழ்ந்த இடமோ அப்பொழுது பிரஷியாவுக்குச் ( ஜெர்மனியில் ஒரு மாகாணம்) சொந்தமாக இருந்த ரைன்லாந்தில் டிரீவ்ஸ் என்னும் நகரம்.

பிறந்த இடத்தாலுமே, குலத்தாலுமே அவரது வாழ்க்கை நெஞ்சை சென்று உறுத்துவாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளிலே வெறுக்கப்பட்ட இனம் யூதர் இனம்தான். நாஸி ( ஹிட்லரின்) ஜெர்மனியில் யூதர்கள் நர வேட்டையாடப்பட்ட கதை நம்மில் பலருக்கு மறந்து  போயிருக்காது.

அவர் பிறந்த ரைன்லாந்த்  என்பது ஜெர்மனிக்கும், பிரான்ஸுக்கும் இடையிலே ரைன்நதி ஓடும் செழிப்பான பிரதேசம்.  இரண்டு நாடுகளுக்கு இடையே இருக்கும் செழிப்பான பிரதேசம் என்றால், அந்த இடத்தின்  கதை எப்படியிருக்கும்  என்று யூகிக்கலாம்.  சில காலம் பிரான்ஸுக்குச் சொந்தமாக இருக்கும். சில காலம் ஜெர்மனிக்குச் சொந்தமாக இருக்கும். அதனால் அங்கு வாழ்ந்த மக்களும் எந்த அரசை நிலையாக நம்புவது என்றில்லாமல் சமயத்திற்குத் தக்கபடி ஊசலாடிக் கொண்டிருந்தனர்.

மனித வாழ்க்கை, மதம், குலம் என்று பிரிவுகளால் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு மார்க்ஸின் தந்தையின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாக அமையும். யூதராக இருந்தவரை அவரால் வக்கீல் தொழிலில் வெற்றி பெறவே முடியவில்லை. அவரிடம் திறமை இருந்தது. நேர்மை இருந்தது. வாக்கு வன்மை இருந்தது. இருந்தாலும் என்ன? அவர் ஒரு யூதர். உண்மை கிறிஸ்தவர்களான கட்சிக்காரர்கள் யூதனை வக்கீலாக அமர்த்திக் கொள்ளலாமா? கூடவே கூடாது !

மார்க்ஸின் உடன்பிறந்தவர்கள் ஏழு பேர். இரண்டு ஆண்களும், ஐந்து பெண்களும். அவர்களிலே இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் குடும்ப நோயாகிய (ஷயரோகம்) எலும்புருக்கியிலே மடிந்தனர். மற்ற மூன்று பெண்களூம் திருமணமாகி கணவன்மாரோடு வசித்து வந்தனர். இருந்த ஒரே பிள்ளையான மார்க்ஸ் பெயரும், புகழும், செல்வமும், செல்வாக்கும் சம்பாதிப்பவனாக ஆகவேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

மார்க்ஸின் தந்தை தன் மகனை ஒரு தோழனாகவே நடத்தினார். தந்தை மீது மிகுந்த பாசமும், மரியாதையும் மார்க்ஸுக்கு இருந்தாலுமே மற்றவர்களிடத்திலே பிள்ளைப் பிராயத்திலே மார்க்ஸ் முரடனாகத்தான் இருந்தார்.  பள்ளிப் படிப்பு முடிந்ததும் டிரீவ்ஸ் நகரிலிருந்த உயர்தரப் பள்ளியிலே சேர்ந்து லத்தீன், கிரீக், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளை கற்றார். கவிதை, தத்துவம் முதலியவற்றிலே அவருக்கு அதிகமான ஆர்வம் இருந்தது.

உயர்தரப் பள்ளி இறுதி ஆண்டிலே அவர் எழுதிய ஒரு கட்டுரை மூலமாக அவரது எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்ளலாம்.

`நாம் எந்த தொழிலை விரும்புகிறோமோ, எதில் நமக்குத் தகுதி இருக்கிறதென்று கருதுகிறோமோ அந்தத் தொழிலை அடைய முடியாமலே போகலாம். ஏனென்றால், நாம் இந்த சமுதாயத்தோடு எத்தகைய உறவு இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு முன்பே அந்த உறவு உருவாகியிருக்கிறது.

மார்க்ஸ் காதலித்த ஜென்னி, அவரை விட நான்கு வயது மூத்தவர்.  ஆரம்ப காலத்தில் அவர் பத்திரிகை ஆசிரியராக இருந்தார். அந்தக் காலத்தில் ரைன்லாந்தில் இடது சாரி சிந்தனாவாதிளுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.  இதனால் சிறிய முற்போக்கு எண்ணம் படைத்தவர்களாயிருந்த முதலாளிகள், அரசாங்கத்திற்கு எதிராக கட்சிப் பத்திரிகை ஒன்றை தோற்றுவித்து நடத்த ஏற்பாடு செய்தனர். அதன் விளைவாக 1842ம் ஆண்டு ` ரைன்லாந்த் கெஜட்’ என்று ஒரு பத்திரிகை வர ஆரம்பித்தது. முதலில் இந்த பத்திரிகையில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார் மார்க்ஸ்.

பின்னர் அந்த பத்திரிகைக்கே ஆசிரியரானார். அவருடைய காரசாரமான கட்டுரைகள் மக்களிடையே புதிய விழிப்பை ஏற்படுத்தின.

இந்த காலகட்டத்தில் மார்க்ஸின் துணிவும் ஆற்றலும் நன்கு வெளிப்பட்டன.  தன் நண்பன் ஒருவனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் மார்க்ஸ் எழுதுகிறார்.

`சுதந்திரத்திற்காக என்று சொல்லிக் கொண்டு பல்லை இளிப்பது, கெஞ்சிக் கூத்தாடுவது, மிருக பலத்தைக் கையாளுவது, குதர்க்கம் செய்வது, கீழ்த்தரமாக பணிந்து போவது, இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வது மகா கேவலம்.  அரசாங்கம் என்னை ஆசிரியப் பொறுப்பிலிருந்து நீங்க வைத்துவிட்டது. இனி நான் ஜெர்மனியிலே வாழவேண்டுமானால், பொய்யனாக, என்னை நானே ஏமாற்றிக் கொண்டு வாழ வேண்டும்' என்றார். தன்னுடைய 'மூலதனம்' நூலை முழுவதும்

எழுதி வெளியிட முடியாமலேயே மார்க்ஸ் மரணமடைந்தார்.

* * *