மொழிபெயர்ப்பு கருவியாகும் மொபைல் போன்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2017

மொழி என்பது தொடர்புக்கு மிகவும் முக்கியமான ஊடக கருவியாகும். மேலும், இவ்வுலகில் சுமார் 6,500 மொழிகள் பேசப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வுலகில் உள்ள அனைவரும் அனைத்து மொழிகளையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இச்சந்தர்ப்பத்தில்தான் மொழிபெயர்ப்பு என்பது அவசியமாகின்றது. மொழிபெயர்ப்பானது தொடர்பை எளிமைப்படுத்தவும் மற்றவர் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளைத் தெரிந்த மொழியில் புரிந்துகொள்வதற்கும் உதவுகின்றது. பெறுமதிமிக்க ஆவணங்கள், புத்தகங்கள், கட்டுரைகள், போன்ற பல்வேறு விஷயங்களில் மொழிபெயர்ப்பின் தேவைகள் தேவைப்படுகின்றன.

சமூக வளர்ச்சி எப்படி பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சி பெற்று வளர்ந்து வருகிறதோ அதே போலவே மொழியும் சமூக மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று வளர்ந்து வருகிறது. மொழி அதன் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்பது மொழியின் வளர்ச்சிக்கும் அந்த மொழியைப் பேசுகின்ற சமூகத்தின் வளர்ச்சிக்கும் அவசியமானதாக உள்ளது. நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு  தொழில்நுட்ப வளர்ச்சி விரிந்துகொண்டே போகிறது.

இந்நிலையில் உலக நிகழ்வுகளைத் தங்கள் தாய்மொழியிலேயே பேசுவதற்கும், படிப்பதற்கும் நாம் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. கணினி வழி மொழிபெயர்ப்பு அல்லது தானியங்கி மொழிபெயர்ப்புக்கான மென்பொருள் கொண்டே இதுவரை மொழிபெயர்ப்பை இயக்கி வந்தோம்.

இந்நிலையில் இணையதளத்தின் பங்களிப்பு இல்லாமல் தனியே இயங்கும் மொழிபெயர்ப்பு கருவி அறிமுகமாகி உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த “இலி டிரான்ஸ்லேட்டர் நிறுவனம்” இந்த கருவியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஆப்பிள் எங்கே கிடைக்கும் என ஜப்பானில் உங்களுக்குத் தெரிய வேண்டும். டோக்கியோ நகர வீதியில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் நீங்கள் கேள்வியைக கேட்டால் போதும் “இலி” உங்களுக்கு ஆப்பிள் எங்கே கிடைக்கும் என ஜப்பான் மொழியில் கேள்வியை உங்களுக்கு கூறும்.


உலகின் முக்கிய மொழிகளில் ஒலி வழி மொழிபெயர்ப்பு குரல் வடிவிலேயே கிடைக்கும்.

பென் டிரைவ் போலத் தோன்றும் இந்த கருவி ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ், மாண்டரின் மொழியில் இருந்து ஜப்பானிஷ் உள்ளிட்ட மொழிமாற்றங்களை ஒலி வடிவில் தருகிறது.

மொழிபெயர்ப்புக்கான மொபைல் அப்ளிகேஷன் அதிகமாக உள்ள நிலையில் இது குரல் மூலம் மொழிபெயர்ப்பைத் தரும் முயற்சி சற்று மாறுபட்டதாக உள்ளது.

இந்த மொழிபெயர்ப்பு கருவியைப் பயன்படுத்துவதற்கு இணையதளம் தேவை இல்லை. 2 நொடிகளில் மொழிபெயர்ப்பைக் கேட்கலாம் என்று “இலி” தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மொழிபெயர்ப்பு கருவி நமக்கு பயணங்கள், பொருட்களை வாங்குதல், விடுதிகளில் பேச எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உதவக் கூடியதாகும். நீண்ட உரையாடல்களுக்காக இது வடிவமைக்கப்பட வில்லை. இது எளிமையான கேள்விகளுக்கு பதிலாக சிறிய சொற்றொடர்கள் பேச மட்டுமே இலி கருவியை பயன்படுத்திக் கொல்லலாம்.    

USB கேபிள் மூலம் இதன் பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம். இந்த மொழிபெயர்ப்பு குறிபிட்ட 3 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே மொழி மாற்றம் செய்துக்கொள்ளலாம். மேலும் பல மொழிகளில் பயன்படுத்த சோதனை செய்து வருகின்றனர் என இலி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர், நமக்கு தேவைப்படும் மொழியை இதில் சேர்த்து பிறகு புதுப்பித்துக் கொள்ளலாம்.

இந்த இலி மொழிபெயர்ப்பு கருவி இன்னும் விற்பனைக்கு வரவில்லை. வரும் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று இலி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ.16,100 எனத் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த கருவியை முறியடிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிதாக கூகுள் பிக்சல் பட்ஸ் இயர்போன் என்ற புதிய ஒலி வழி மொழிபெயர்ப்பு கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுளின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் பல்வேறு சாதனங்களுடன் கூகுள் பிக்சல் பட்ஸ் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களைத் தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், தங்கள் தாய்மொழியிலேயே உலகின் பல்வேறு மொழிக்காரர்களுடன் உறவை மேம்படுத்த உதவும் வகையில் மொழிபெயர்ப்பு கருவியை நமக்கு படைத்திருக்கிறது கூகிள்.

கூகுள் இதுவரை பலமொழிகளில் மொழிபெயர்க்ககூடிய அளவிற்கு வார்த்தைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழில் உள்ள கருவிகள் என்று பார்த்தால் செய்திகள், மின்னஞ்சல், தட்டச்சு கருவி, மொழிப்பெயர்ப்பு, தேடல், காணொளி, படங்கள், ஆவணம், என ஏராளமான சேவைகள் வழங்குகிறது. அதுமட்டும் இன்றி  பல்வேறு புதிய சாதனங்களையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

பிக்சல் 2, பிக்சல் 2 எக்ஸ் எல், டே டிரீம் வியூ விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட், கூகுள் ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கர், போன்ற சாதனங்களை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் கூகுள் வழங்கியுள்ள சமீபகால சேவை கூகுள் மொழிபெயர்ப்பு கருவியாகும்.


இது செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. கூகுள் நிறுவனத்தின் புதிய இயர்போன்களை அந்நிறுவனம் கூகுள் பிக்சல் பட்ஸ் என அழைக்கிறது.

“பிக்சல் பட்ஸ்” முழுமையான வயர்லெஸ் வசதி இல்லை.  ஒற்றை ஒயர் இணைப்பு கொண்டது. இந்த கருவியை ஸ்வைப் செய்தே வேலை வாங்கலாம். இதற்கு ஏற்ப பிக்சல் பட்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதை இயக்குவது மிக எளிமையானதாக இருக்கும்.

“பிக்சல் பட்ஸ்” என்று அழைக்கப்படும் இந்த இயர்போன், சுமார் 40 மொழிகளை மொழிபெயர்த்து நமக்கு அளிக்கும். கூகுள் டிரான்ஸ்லேட் சேவைக்கு இது பயன்படுகிறது.

ஸ்பானிஷ் மொழி தெரிந்த ஒருவரிடம் பேச வேண்டும் என்றால்  நீங்கள் கூற  நினைக்கும் விஷயத்தை நமக்குத் தெரிந்த மொழியில் சொல்லிவிட்டால் நாம் பேசியவை அனைத்தும் ஸ்பானிஷ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு நாமக்கு ஏதிரே இருப்பவர்களுக்கு விஷயத்தை கொண்டு போய்ச் சேர்த்துவிடும். ஆனால் இந்த  கூகுள் பிக்சல் பட்ஸ் மொழிபெயர்ப்புக் கருவி  கூகுள்  தற்போது வெளியிட்டுள்ள, பிக்செல் 2 மற்றும் பிக்செல் 2 எக்ஸ்.எல் ஆகிய மொபைல் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிக்செல் 2 மற்றும் பிக்செல் 2 எக்ஸ்.எல் மொபைல் போனின் விலை ரூ.73,000த்திலிருந்து தொடங்குகிறது. இந்த  இயர்போனின் விலை ரூ.10,300 ஆகும்.

இந்த மொழிபெயர்ப்பு கருவியில் நீங்கள் நினைத்த மொழியைத் தேர்வு செய்து பேச முடியும். உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதி கொண்டிருப்பதால் நமது தாய் மொழியை தெரிந்திராதவர்களிடமும் எவ்வித தயக்கமும் இன்றி நாம் பேச முடியும். 


கட்டுரையாளர்: முத்துலட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation