பொதுமக்களை சிலுவையில் ஏற்றும் ஜிஎஸ்டி

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2017

ஜிஎஸ்டி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரி கிட்டத்தட்ட இந்திய பொருளாதாரத்துக்கான சர்வ ரோக நிவாரணி என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் தெருவில் இறங்கிக் கூவாததுதான் பாக்கி.

ஜூலை 30ந் தேதி ஜிஎஸ்டியை துவக்கிவைத்து நள்ளிரவில் பிரதமர் மோடி, அருண்ஜெட்லி ஆற்றிய உரைகளைப் பாருங்கள்:

“சர்தார் வல்லபாய் படேல் இந்தியாவை ஒருங்கிணைந்த தேசமாக உருவாக்கினார். இந்தியாவின் பொருளாதாரத்தை ஜிஎஸ்டி ஒருங்கிணைக்கும்.”

“புதிய இந்தியாவில் ஒரே வரி, ஒரே மார்க்கெட், ஒரே தேசம்” உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் நள்ளிரவு விழாக்கள் நான்குதான் 2017 வரை நடந்திருந்தன.

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது நடந்த விழா

1972இல் இந்திய சுதந்திர தின வெள்ளி விழா,

1992இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவு தின விழா,

1997 இந்தியச் சுதந்திர தின பொன் விழா,

ஐந்தாவதாக 2017 ஜூன் 30இல் ஜிஎஸ்டி துவக்க விழா.

இந்த ஆர்ப்பாட்டமும் மார்தட்டுதலும் தேவைதானா?

ஐக்கிய நாடுகள் சபை வளரும் நாடுகளுக்கு வரி விதிப்பு தொடர்பாக வழிகாட்டுதலுக்காக ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சில் என்ற அமைப்பு உள்ளது. அதில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. இந்தியப் பிரதிநிதிகள் அதன் நிர்வாகப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டு செயல்பட்டுள்ளனர்.

இந்த கவுன்சில் வளரும் நாடுகளில் வரி விதிப்பு எப்படி அமைய வேண்டும் என்று பரிந்துரை வழங்கி உள்ளது. புதிதாகத் தோன்றும் பிரச்சினைகளை ஆண்டுக்கு ஒருமுறை கூடி விவாதித்து புதிய முடிவுகளை, திருத்தங்களை மேற்கொள்கிறது.

இந்த அமைப்பின் பரிந்துரைகளின்படி உலக நாடுகள் எல்லாம் தங்கள் வரி விதிப்பு கொள்கைகளை முன்பு வகுத்து வந்தன.

ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தகம் பெரிய அளவில் வளர்ந்து சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

ஏற்றுமதிக்காக உற்பத்தி, ஏற்றுமதிக்காக வரிச்சலுகை, ஏற்றுமதி உற்பத்திக்கென வெளிநாடுகளில் இருந்து முதலீடு, வளரும் நாடுகளில் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறைவாக இருப்பதை பயன்படுத்தி அங்கு உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தல் என பொருளாதாரம் 1970களில் புதிய பரிமாணங்களைப் பெற்றது.

இந்த வளர்ச்சிகளுக்கு ஏற்ப வரி விதிப்பு முறைகளிலும் மாற்றம், புதியவிதிகள் தேவைப்பட்டன. இதுவரை ஐக்கிய நாடுகள் சபை காட்டிய வரிவிதிப்பு முறையை இந்தியா பின்பற்றி வந்தது. 2000க்கு பிறகு இந்தியா சர்வதேச வரிவிதிப்பு முறை தொடர்பாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனம் (OECD) 1961இல் துவக்கப்பட்டது. ஜனநாயகத்தையும் சந்தைப் பொருளாதாரத்தையும் சார்ந்து நிற்கும் எனக் கூறப்பட்டவை இந்த அமைப்பில் இருந்த நாடுகள். இவை எல்லாம் தொழில்துறையில் வளர்ச்சி அடைந்த நாடுகள். அதனால் தங்கள் உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றை நிலை நிறுத்தவும் பல துணை அமைப்புகளையும் ஓஈசிடி அமைப்புடன் இந்நாடுகள் நிறுவின. வளரும் நாடுகளுக்கான வரி ஆலோசனைகளை கட்டணமின்றி வழங்க இந்த அமைப்பு முன்வந்தது.

பொருளாதார சீர்திருத்தம், உலக வங்கியின் ஆலோசனைப்படி பொருளாதார கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவற்றோடு போனசாக இந்த வரி ஆலோசனைகள் வந்து சேர்ந்தன.

ஐ.நா. சபையின் துவக்க வரி விதிப்பு கொள்கையின்படி எங்கு உற்பத்தி நடக்கிறதோ அங்கு வரி விதிக்கப்பட வேண்டும். இதனை சோர்ஸ் பிரின்சிபிள் (Source Principle) என்று கூறுவார்கள். இதைப பினபற்றித் தான் எக்ஸ்சைஸ் வரி இங்கு விதிக்கப்பட்டது.

சிறுதொழில் நிறுவனங்கள், நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய தொழிற்சாலைகள் உற்பத்தி வரியான எக்சைஸை செலுத்த வேண்டும். பொது மக்கள் பொருளை வாங்கும் பொழுது விற்பனை வரியை செலுத்துவார்கள்.  இந்த வரி விதிப்புக் கொள்கை, இன்றுவரை தொடர்ந்திருந்தால் இன்றைய ஜிஎஸ்டி குழப்பம் ஏற்பட்டிராது.

ஜிஎஸ்டி அல்லது வாட் என்றழைக்கப்படும் வரிவிதிப்புக்கொள்கை ஐநாவின் வரிவிதிப்புக் கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. உற்பத்திப் பொருளைப் பயன்படுத்த யார் வாங்குகிறார்களோ அவர்கள் இது வரை உற்பத்திக் கம்பெனிகள், வியாபாரிகள் செலுத்திய வரிகளின் கூட்டுத் தொகையை மொத்தமாக செலுத்தியாக வேண்டும். பொருள் இறுதியாக விற்கப்படும் இடத்தில் வரி விதிப்பது புதிய வரிவிதிப்புக் கொள்கையாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டது.

உற்பத்தியில் தொழில் நிறுவனங்களுக்கு வரி இல்லை. வாங்கும்பொழுது மக்கள்தான் வரி செலுத்த வேண்டும் என்ற கொள்கை, தொழில் நிறுவனங்களுக்கு லாபம் தரும் கொள்கை. இப்பொழுது தெரிகிறதா ஏன் கம்பெனிகள எல்லாம் ஜிஎஸ்டிக்காக ஆதரவுப் பாட்டு பாடுகின்றன என்று.

எனவே ஜிஎஸ்டியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதும் மோடி அரசும் ஒரு கமாவைக்கூட மாற்றாமல் ஏற்றுக்கொண்டதும் ஆச்சரியம் இல்லை.

இந்த வகையில் ஜிஎஸ்டிக்கான முதல் விதையை விதைத்தவர் பிரணாப் முகர்ஜி என்று கூறலாம். அவர் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் மார்ச் 22ம் தேதி 2011ஆம் ஆண்டு ஜிஎஸ்டி சட்டத்திற்கான முதல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மசோதா நிதித்துறை நிலைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. நிதித்துறை நிலைக்குழு அப்பொழுது முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்சின்ஹா தலைமையில் இயங்கியது. அவர் தலைமையிலான குழு ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகு மசோதாவை அவையில் தாக்கல் செய்ய பரிந்துரை செய்தது. அத்துடன் சில திருத்தங்களையும் முன்வைத்தது.

மசோதா தயாரான பிறகு, தாக்கல் செய்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கு காங்கிரஸ் அரசுக்கு கால அவகாசம் கிடைக்கவில்லை. அதனால், மசோதா காலாவதியாகிவிட்டது.

பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த மசோதா, பிரசவத்தின்போதே இறந்து பிறந்த குழந்தையாகிவிட்டது. பிரணாப் முகர்ஜிக்கு அந்த முன்னுரிமை கூடகிடைப்பதை பாஜக விரும்பவில்லை.
இந்த ஜிஎஸ்டி மசோதாவுக்கு, நாங்கள்தான் முதலில் வித்திட்டோம் என்று பாஜக இப்பொழுது பெருமையடித்துக்கொள்கிறது. ஆனால், ஜிஎஸ்டிக்கு முன்னோடியாக, அமைந்த வாட் வரி, எக்ஸைஸ் வரி ஆகியவை குறித்து சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று, 1986 -1987 வரவு – செலவு திட்ட  அறிக்கையில் முதலில் கூறியவர் வி.பி.சிங்.
அவர் சிறு தொழில்கள் பாதிக்கப்படக்கூடாது  என்பதற்காக எக்ஸைஸ் வரியில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

 ஆனால், பிள்ளையார் பிடிக்கபோய், குரங்கான கதையாக அது மாறிப்போய் விட்டது.

2000இல் வாஜ்பாய் பிரதமராக இருக்கும்பொழுது மறுபடியும் வரிச் சீர்திருத்தம் பற்றிய விவாதம் நடந்தது. அப்பொழுது, வரி சீர்திருத்தம் பற்றி முடிவு செய்யவும் ஜிஎஸ்டி பற்றிய வரைவு சட்டம் ஒன்றைத் தயாரிக்கவும், வாஜ்பாய் நடவடிக்கை எடுத்தார். மேற்குவங்க நிதிஅமைச்சராக இருந்த அசீம் தாஸ் குப்தா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அத்துடன் வரிச் சீர்திருத்தங்கள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக, விஜய் கேல்கர் என்ற உயர் அதிகாரியின் தலைமையில் பணிக்குழு ஒன்றை வாஜ்பாய் நியமித்தார்.

கேல்கர் நிதியமைச்சக ஆலோசகராக பணியாற்றியவர். அவர் ஜிஎஸ்டி சட்டத்தை இந்தியா இயற்ற வேண்டும். இப்பொழுது உள்ள சட்டங்களுக்குப் பதிலா ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என 2004ல் கூறினார்.
வாஜ்பாய் காலத்தில் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரையை காங்கிரஸ் ஒரு பேச்சுக்குக்கூட எதிர்ப்போ மறுபரிசீலனையோ இல்லாமல், ஏற்றுக்கொண்டது. 2010 ஏப்ரல் 1ம் தேதிக்குள் ஜிஎஸ்டி சட்டத்தை அமலுக்கு கொண்டுவருவோம் என ப. சிதம்பரம் அறிவித்தார்.

2014 ல் தேர்தலுக்கு முன்பு இந்த வரிவிதிப்புக் கொள்கை மாற்றம் பற்றி அன்று நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தொழிலதிபர்கள் அமைப்பான ஃபிக்கியின் நிர்வாகிகளுடன் 24.3.2014இல் பேசும்பொழுது பெருமை அடித்துக் கொண்டுள்ளார்.

“பாரம்பரியமாக ஐ.நா. சபையில் வரிவிதிப்புக் கொள்கை முறையைத்தான் இந்தியா பின்பற்றி வந்தது. ஆனால், இப்பொழுது வளர்ச்சியடைந்த நாடுகளின் மாடல் குறித்து கடந்த சில வருடங்களாக கவனம் செலுத்தி வந்தது.

வரிவிதிப்பு தொடர்பான விவரங்களைப் பரிமாறிக் கொள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் சம்மதம் தெரிவித்துவிட்டன. ஓஈசிடியின் வரிவிதிப்பு மாதிரிகொள்கையிலும் அது சேர்க்கப்பட்டுவிட்டது. என்றார் பிரணாப் முகர்ஜி.

அதுமட்டுமல்ல, வளர்ச்சியடைந்த நாடுகளின் நிதிவிவகார நடவடிக்கைக் குழுவில் 34வது உறுப்பினர் நாடாக இந்தியாவைச் சேர்த்துள்ளனர். நடவடிக்கைக் குழுவில் உறுப்பினராக இல்லாத நிலையில் ஓஈசிடி மாடலை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. இனி அந்தப் பிரச்சினையும் அரசுக்கு இல்லை” என்றார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

பிரணாப் முன்னையிட்ட தீ தான் ஜிஎஸ்டியாக வளர்ந்துள்ளது.

நுகர்வோரான இந்திய பொதுமக்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும். தொழிற்சாலைகள் எல்லாம் வரி செலுத்தினாலும் அதனை இன்புட் கிரெடிட் என்ற வகையில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று இந்திய பொதுமக்கள் தலையில் மிளகாய் அரைக்க வந்திருக்கிறது இப்பொழுது ஜிஎஸ்டி.
எனவே, காங்கிரஸ், பாஜக ஆகிய அரசுகளின் கள்ளப்பிள்ளை ஜிஎஸ்டி என்பதில் சந்தேகம் இல்லை. இது சரித்திர பூர்வமான உண்மை.
இந்த இரண்டு அரசுகளும் எப்பொழுதும் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு, ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தவர்கள் என்பதை நிரூபிக்க ஜிஎஸ்டியைத் தவிர சிறந்த எடுத்துக்காட்டு வேறு எதுவும் இல்லை.

அருண்ஜெட்லியின் ஜிஎஸ்டி சட்டம் எப்படி மக்களை சிலுவையில் அறைகிறது என்பதை தனியாகத்தான் பார்க்கவேண்டும்.


கட்டுரையாளர்: க. சந்தானம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation