மன்னிப்பு கேளுங்கள் பிரதமர் அவர்களே!

பதிவு செய்த நாள் : 20 அக்டோபர் 2017

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் ரத்து நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஓராண்டை நெருங்கிக்கொண்டு இருக்கிறோம்.


எந்தவித முன்னேற்பாடுகளும் இன்றி பிரதமர் மோடி எடுத்த தன்னிச்சையான முடிவால் நாடும், நாட்டு மக்களும் அடைந்த, அடைந்து கொண்டிருக்கும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

மந்திரக்கோல் மாயாவி போல், சென்ற ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவில் தொலைக்காட்சியில் தோன்றி, ‘இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்று அறிவித்தார் பிரதமர் மோடி.

கருப்புப் பணத்துக்கும், பயங்கரவாத நிதி திரட்டலுக்கும் எதிரான நடவடிக்கை என்று அதற்கு ‘ஜிகினா’ விளக்கம் கொடுத்தார்.

ஒரே நாளில் நாட்டு மக்களின் சட்டப்பையில் இருந்த பணம் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

பதறிப்போன மக்கள் அன்றைய தின இரவே ஏடிஎம் வாசல்களில் தவம் கிடந்தனர். அடுத்த சில தினங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கி வாசல்களில் காத்துக்கிடந்தனர்.


ஆனால், மாற்றிக்கொடுப்பதற்கு தேவையான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் தயாராகி இருக்கவில்லை. ஒருநாளில் ஒருவர் நான்காயிரம் ரூபாய் தான் மாற்றிக்கொள்ள முடியும் என்று இலக்கு வேறு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போதாகுறைக்கு புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளின் அளவை மாற்றியதால் அவற்றை ஏடிஎம்கள் மூலமாக உடனடியாகப் பெற முடியவில்லை. நாடு முழுவதும்

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்து, “பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுங்கள், நாடே டிஜிட்டலாகப் போகிறது” என்று பசப்பத் தொடங்கினார்கள்.

வாழ்நாளில் ஒரு முறைகூட வங்கிகளுக்கே போயிராதவர்கள் கோடிக்கணக்கில் வசிக்கும் நாட்டில், பணமில்லாத பரிவர்த்தனை எந்த அளவுக்கு செல்லுபடியாகும் என்ற எதார்த்தத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

எனக்கு 50 நாள் கால அவகாசம் கொடுங்கள் இந்தத் தேசத்தை அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறேன் என்றார் மோடி. ஓராண்டு நெருங்கிய பின்னரும் ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் பாதிப்புகள் தொடர்கின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அன்றாடக்கூலிகள் முதல் பெருநிறுவனங்கள் வரை பலத்த அடியை எதிர்கொண்டன. அதன் சுவடுகள் இப்போதும் தொடர்கின்றன. இந்நடவடிக்கையால் 14 லட்சம் பேர் வேலையிழந்தனர் என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம் சீரழிந்தது. உரம் வாங்கக் கூட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டார்கள்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7 சதவீதம் என்னும் கீழ் நிலைக்கு சென்றிருக்கிறது. வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தொழிற்துறையும் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது. ஏற்றுமதி இறங்கு முகத்தை அடைந்திருக்கிறது.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44  லட்சம் கோடி. அதில் 98.96 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன. அதாவது ரூ.15.28 லட்சம் கோடி வங்கிகளுக்கே திரும்பி விட்டது. வராத நோட்டுகளின் மதிப்பு 16,000 கோடி ரூபாய். புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய அரசு செலவிட்ட தொகையோ, சுமார் 21,000 கோடி ரூபாய் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அதாவது, 16,000 கோடி ரூபாயைப் பிடிக்க 21,000 கோடி ரூபாய் செலவு. மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதை!

பொருளாதாரச் சரிவையெல்லாம் கொஞ்ச நாளில் சரி செய்து விடலாம் என்றே வைத்துக் கொள்வோம். உருப்படாத ஒரு நடவடிக்கையால் உயிர் இழந்தவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது மத்திய அரசு.?

பழைய கணக்குப்படி நாடு முழுவதும் சுமார் 130 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். வங்கி வரிசையில் நின்று உயிர் விட்டவர்கள், பணத்தை மாற்ற முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டவர்களும் இதில் அடங்குவார்கள்.

கருப்புப் பணத்துக்கும், கள்ளநோட்டுக்கும் இடையேயான எதிரான ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்று இதை பாஜக தலைவர்கள் வர்ணித்தனர். ஆனால், புதிய நோட்டுகள் வெளியாகி அடுத்த சில தினங்களிலேயே அவற்றுக்கும் கள்ளநோட்டுகள் வெளிவந்தது துயர நகைச்சுவை.

ஒரு சில வங்கி அதிகாரிகளைத் தவிர, இந்நடவடிக்கையால் பலன் அடைந்தவர்கள் என்று அனேகமாக யாரும் இல்லை. வருமான வரி வசூலும் கொஞ்சம் அதிகரித்தது என்று வருமான வரித்துறை சொல்கிறது.

பெருநிறுவன அதிபர்களோ, பெரும்பணக்காரர்களோ வங்கி வரிசையில் நின்றதை பார்க்க முடியவில்லை. முழுக்க முழுக்க சாமானியர்களைத் தான் வதைத்தது இந்நடவடிக்கை.

உலக வங்கி, பன்னாட்டு செலாவணி நிதியம் போன்றவையும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லி வருகின்றன. உலகப்பொருளாதார நிபுணர்கள் அனைவரும் இது முட்டாள்தனமான நடவடிக்கை என்று சொல்லி விட்டார்கள்.

பாஜகவில் இருந்து கூட யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் இதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள்.

என்றாலும், இதன் தோல்வியை ஒப்புக்கொள்ள பிரதமர் மோடியோ, அவரது அமைச்சரவையோ தயாராக இல்லை.

பிரதமர் சூராதி சூரராக இருக்கலாம். கறுப்புப் பண முதலைகள் தப்பி விடுவார்கள் என்பதற்காக முன்கூட்டியே கூறவில்லை எனச் சொல்லலாம். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி “வேண்டாம், செய்யாதீர்கள்” என்று சிவப்புக் கொடியைக் காட்டிய பிறகும் பிடிவாதமாகச் செய்தால் என்ன அர்த்தம்? ஜனநாயகமும் இல்லை. பொருளாதார விவரங்களை ஏற்கும் நிலையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

சமீபத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்திருந்தார். அங்கு, இந்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அதற்கு பதிலடியாக நிதி அமைச்சர் ஜெட்லியை அமெரிக்காவுக்கு அனுப்பி, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பற்றி ‘நல்ல’தாக பேச வைத்து சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை படுதோல்வி என்பது உறுதியாகி விட்டது. இனி என்னதான் அதற்கு வெள்ளைச் சாயம் பூசினாலும், உண்மை பல்லிளித்துக் கொண்டே இருக்கும்.

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையை அவசரப்பட்டு ஆதரித்ததற்காக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மன்னிப்பு கேட்டு இருந்தார். பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

பிரதமர் மோடி இந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். தன்னிச்சையான ஒரு முடிவால் 130 உயிர்கள் பலியானதற்கும், சாமானியர்களை மீளாத துயரத்தில் தள்ளியதற்கும், பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதற்கும் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்குரிய மனம் இருந்தால்!

அதிகாரம் எப்போதும் மேலிருந்து அளிக்கப்படுவதில்லை. அது கீழிருந்து மக்களால் அளிக்கப்படுவது.

இதை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களுக்கு, தேர்தலில் தக்க பாடம் புகட்ட மக்கள் காத்திருக்கிறார்கள்.


கட்டுரையாளர்: பிரதீப்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Murali 21-10-2017 12:58 AM
சாமானியர்களை மீளாத துயரத்தில் தள்ளியதற்கும் பெொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதற்கும் நாட்டு மக்களிடம் மேோடி பகிரங்க மன்னிப்பு .கேட்கவேண்டும். இந்த கட்டுரை அருமையான படைப்பு. உருவாக்கிய பிரதீப்புக்கு வாழ்த்துகள் பல.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Murali 21-10-2017 12:58 AM
சாமானியர்களை மீளாத துயரத்தில் தள்ளியதற்கும் பொருளாதாரத்தை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றதற்கும் நாட்டு மக்களிடம் மோடி பகிரங்க மன்னிப்பு .கேட்கவேண்டும். இந்த கட்டுரை அருமையான படைப்பு. உருவாக்கிய பிரதீப்புக்கு வாழ்த்துகள் பல.

Reply Cancel


Your comment will be posted after the moderation