ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற கூடாது: உச்ச நீதிமன்றம் ஆணை

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 02:06

புதுடில்லி,

ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இன்று ஆணை பிறப்பித்தது.


ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்னை இன்று உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்தது. அப்பொழுது இந்தப் பிரச்னையைப் பல அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. உணர்வு பூர்வமான விவாதங்களுக்கு இடம் ஏதுமில்லை. இந்தியாவிற்குள் அடைக்கலம் கோரி வந்தவர்களை மீண்டும் வெளியேற்ற உத்தரவிடுவது மனிதாபிமானத்துக்கு விரோதம் அதேசமயம் நாட்டின் பாதுகாப்பு பற்றிய அம்சங்களையும் ஒதுக்கித் தள்ளமுடியாது.

மனிதர்களின் அடிப்படை மனிதாபிமானம், பாதுகாப்பு, ஆதரவற்ற நிலையில் வந்த எங்கள் குழந்தைகள், அவர்களது கல்வி, இவையெல்லாம் இந்த பிரச்னையில் இணைந்துள்ளன என உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் குழு கூறியது.

இந்தியாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள் என கூறியிருக்கக் கூடாது. இந்தப் பிரச்னையில் வெளிநாடுகளில் ஒரு கருத்தும், இந்தியாவில் ஒரு கருத்தும் அரசு சார்பில் கூறப்பட்டுள்ளன.

இந்த நீதிமன்றம் உணர்வுகளுக்கு இடம் அளிக்காமல் சட்டப்படி பிரச்னையின் எல்லா அம்சங்களையும் பரிசீலிக்க விரும்புகிறது.

வரும் நவம்பர் 21ம்.தேதி முதல் ரோஹிங்யா பிரச்னை பற்றிய முழுமையான விசாரணை துவங்கும். அதுவரை ரோஹிங்யா முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெ ளியேற்றிக் கூடாது என தீபக் மிஸ்ரா கூறினார்.

உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை எழுத்துப் பூர்வமாக வெளியிட வேண்டாம் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கேட்டுக் கொண்டார். ஏனென்றால் இந்த பிரச்னை சர்வதேச அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் எனக் கூறினார்.

அதுபற்றி கவலைப்பட வேண்டாம். இடைக்காலத்தில் உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தை அணுகி மனுச் செய்யலாம் என நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.