டில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும், வியாபாரிகள் மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் ஆணை

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 01:16

புது டில்லி,

டில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்  என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டில்லியில் தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம்  டில்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்.சி.ஆர் பகுதிகளில் அக்டோபர் 31ந்தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தது. கடந்த திங்களன்று இதற்கான உத்தரவை வெளியிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசு விற்பனையாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட பட்டாசுகளை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது,  டில்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மேலும், வணிகர்களின் மேல் முறையீடு மனு மீதான விசாரணையை நவம்பர் முதல் வாரம் தள்ளி வைப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.