பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் டாடா டெலிசர்வீசஸ் இணைகிறது

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2017 00:43

புது டில்லி,

தொடர்ந்து இழப்பு, கடன் சுமை, ஆகிய காரணங்களால் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் டாடா டெலிசர்வீசஸ் கம்பெனி இணைகிறது.

தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டிகளை எதிர் கொள்ள முடியாமல் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் ரூ.31,000 கோடி கடனில் உள்ளது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தை இணைத்துக் கொள்ள பார்தி ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் டாடா டெலிசர்வீசஸ் (டி.டி.எஸ்.எல்) மற்றும் டாடா டெலிசர்வீசஸ் மகாராஷ்டிரா(டி.டி.எம்.எல்) நிறுவனங்களின் 19 தொலைத் தொடர்பு வட்டங்களை சேர்ந்த 4 கோடி வாடிக்கையாளர்கள் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களாக ஏர்டெல் நிறுவனத்துக்கு மாறுவார்கள்.
கடன் மற்றும் பாக்கி முதலியவைகளை டாடா டெலிசர்வீசஸ் தன் செலுத்த வேண்டும். இந்த இணைப்பு நடவடிக்கை வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

அதேசமயம்  அலை கற்றை ஒதுக்கீட்டிற்காக மத்திய அரசுக்கு வழங்கும் மொத்த தொகையில் 20 சதவீதமான ரூ.9,000-ரூ.10,000 கோடியை பார்தி ஏர்டெல் செலுத்தும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏர்டெல் நிறுவனம் கைக்கொள்ளும் 7-ஆவது நடவடிக்கை இதுவாகும்.