திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை விட யாரும் அதிகம் கொடுக்க வேண்டாம்: விஷால்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 23:59

சென்னை,

சென்னை மற்றும் தமிழகமெங்கும் திரையரங்குகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட யாரும் அதிகக் கட்டணம் கொடுக்க வேண்டாம் என நடிகர் விஷால் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதமும் மட்டுமே கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

திரைப்படத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக, விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் தலைமைச் செயலகத்தில் , நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இன்றும் பேச்சு வார்த்தை தொடர்ந்தது. இதன் முடிவில், தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10 சதவீதத்திலிருந்து  8 சதவீதம் ஆக இரண்டாவது முறையாக தமிழக அரசு குறைத்துள்ளது.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் கூறியதாவது:

கேளிக்கை வரியை முழுமையாகக் குறைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால், தமிழக அரசு கேளிக்கை வரியை 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் ஆகக் குறைத்துள்ளது.  மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 40, அதிகபட்சக் கட்டணம் ரூ. 150. திரையரங்குகளில் இதை விடவும் அதிகமாகக் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்.

அதிகக் கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்காதீர்கள் என்று தயாரிப்பாளர் சங்கமே கூறுகிறோம்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட யாரும் அதிகம் கொடுக்க வேண்டாம். 

மக்கள், நியாயமான கட்டணத்தில் படம் பார்க்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். என திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது. 

திரையரங்க கேண்டீனில் தயாரிப்பு விலைக்கே உணவுப் பொருள்களை விற்கவேண்டும். பொருட்களைப் பல மடங்கு கூடுதலான விலைக்கு விற்றால் புகார் தரலாம் என்றும் விஷால் கூறியுள்ளார்.

மேலும், திரையரங்குகளில் அம்மா குடிநீரை 10 ரூபாய்க்கு விற்கும் திட்டத்தையும் அமல்செய்ய யோசனை கூறியிருக்கிறார் விஷால்.

முதல்வருக்கு நன்றி

திரையரங்க கேளிக்கை வரி கட்டணத்தை 2வது முறையாக 8 சதவீத அளவிற்கு குறைத்ததற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அனைவரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முதல்வருடன் சந்திப்பு நிகழ்வில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலவைர் பிரகாஷ்ராஜ், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.