டெங்கு நோயாளிகளைப் பார்க்க என்னுடன் வாருங்கள்: அமைச்சருக்கு ஸ்டாலின் அழைப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 23:17

சென்னை,

அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிகளைப் பாரக்க வேண்டுமா? என்னுடன் வாருங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று காட்டுகிறேன் என சமூகநல அமைச்சர் சரோஜாவுக்கு  தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அழைப்பு விடுத்தார்.

சென்னையில் இன்று மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெங்குவை கட்டுப்படுத்த மத்தியக் குழு வந்திருப்பதை உள்ளபடியே வரவேற்கிறோம். டில்லியில் இருந்து வந்துள்ள குழு டெங்கு குறித்த உண்மையான விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும், டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.
அமைச்சருக்கு விளக்கம்
டெங்குவினால் இறந்தவர்களின் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிடத் தயாரா என்று அமைச்சர் சரோஜா கேட்டிருக்கிறார்.

சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா டெங்கு காய்ச்சலே கிடையாது, ராசிபுரத்தில் இறந்த 11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை, சாதாரணக் காய்ச்சலால் இறந்தது என்று சொல்லியிருக்கிறார். என்னிடத்தில் உரிய ஆதாரம் இருக்கிறது. சேலத்தில் உள்ள ஸ்ரீகோகுலம் என்ற மருத்துவமனையில் சிபி சக்கரவர்த்தி என்பவரின் 11 மாத குழந்தை சிஜ்ஜோ சிலி டெங்கு காய்ச்சலால் இறந்ததாக இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்கள்.

இந்த ஆதாரம் அமைச்சருக்குப் போதுமானதா? அல்லது அவர் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால், எந்தெந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, நானே அவரை நேரில் அழைத்துச் சென்று காட்டவும் தயாராக இருக்கிறேன். அவர் வருவதற்குத் தயாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இன்றைய கேள்வி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் எந்த நேரத்திலும், ஏன் நாளைய தினமே ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தினாலும், சந்திக்கத் தயாராக இருக்கிறோம்.

ஆனால், இந்தப் பின்னணியில் நான் கேட்க விரும்புவது என்னவென்றால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை வருமான வரித்துறையே கண்டுபிடித்தது. அதனால், தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி, தள்ளி வைத்தது.

அந்தச் சோதனையின் போது, 89 கோடி ரூபாய் விநியோகம் செய்தவர்களின் பட்டியலில் உள்ள முதல் பெயர் தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரேதான் இப்போதும் முதல்வராக இருக்கிறார். முதலில், கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது எழுந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. 

இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.