மகாராஷ்டிராவில் நான்டெட் நகராட்சி தேர்தல்: காங்கிரஸ் அமோக வெற்றி

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 22:42

மும்பை,

மும்பையின் நான்டெட் நகரத்தில் நடந்த நகராட்சி தேர்தலில் 73 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவானின் சொந்த ஊரான மும்பையின் நான்டெட் – வகாலா நகராட்சியில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் வியாழட்கிழமை வெளியிடப்பட்டன. 4 இடங்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 81 இடங்களில் 73 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த நகராட்சி உருவானதில் இருந்து கடந்த 20 வருடங்களாக காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக 6 இடங்களிலும் சிவசேனா ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது. சுயேட்சி வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் ‘‘இந்த வெற்றி மூலம் மகாராஷ்டிராவில் பாஜகவின் அதிகாரம் சரிந்து வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வாக்குபதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் நடக்காமல் இருக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட்டோம். அதுவே எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்’’ என அசோக் சவான் தெரிவித்தார்.

‘‘உயர்ந்து வரும் பெட்ரோல் விலை, விவசாயிகள் தற்கொலை, கடன் பிரச்சனைகள் போன்றவற்றால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுவது அனைத்தும் வெற்று வாக்குறுதிகள் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.’’ எனறும் சவான் கூறினார்.

இந்நிலையில் பாஜக வெளியிட்ட செய்தியில் ‘‘2012ம் ஆண்டு நடந்த நான்டெட் – வகாலா நகராட்சி தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் வெறும் 3 சதவீதமாக இருந்தது. ஆனால் அது தற்போது 19 சதவீதமாக அதிகரித்துள்ளது’’ என மஹாராஷ்டிரா தொழிலாளர்கள் துறை அமைச்சர் சம்பாஜி படேல் கூறியுள்ளார். முந்தைய நான்டெட் – வகாலா நகராட்சி தேர்தலில் பாஜக இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மகாராஷ்டிரா சுவபிமான் பக்‌ஷா (எம்.எஸ்.பி) கட்சி தலைவர் நாராயண் ரானே ‘‘இந்த மோசமான தோல்விக்கு என்ன காரணம் என்பதை பாஜக ஆராயவேண்டும். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பிரச்சாரம் செய்தும் தேர்தலில் தோல்வியடைந்த காரணத்தை கண்டுபிடித்து கட்சியில் தேவையான மாற்றங்கள் செய்யவேண்டும் ’’என்று நாராயணன் ரானே அறிவுறுத்தினார்.

சிவசேனா விமர்சனம்

இந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை மட்டும் கைப்பற்றிய சிவசேனா பாஜகவின் தோல்வியை கடுமையாக விமர்ச்சித்துள்ளது.

‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைத்த பாஜகவிற்கு இந்த தோல்வி கடும் அதிர்ச்சியளித்திருக்கும். பாஜகவையும் தோற்கடிக்க முடியும் என்பதை இந்த தேர்தல் உணர்த்தியுள்ளது’’ என சிவசேனாவின் பத்திரிகையான சாமனா செய்தி வெளியிட்டுள்ளது.