தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு இன்று துவங்கியது

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 20:42

சென்னை,

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்காக இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் புக்கிங் கவுன்டர் சென்னையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.


சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

தீபாவளிக்காக வெளியூர் செல்வதற்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகளின் டிக்கெட் முன்பதிவிற்காக இன்று முதல் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில்  26 டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் 2 கவுன்டர்கள்,

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் 1 கவுன்டர் திறக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

அக்டோபர் மாதம் 15, 16, 17 ஆகிய நாட்களில் கனரக வாகனங்கள் சென்னைக்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

சுங்கச் சாவடிகளில் பேருந்துகளுக்கு தனி வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது, எனவே, போக்குவரத்து சிரமமின்றி மக்கள் பாதுகாப்பாக தங்களது ஊர்களுக்கு செல்லலாம்.

சேலம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலும் போக்குவரத்து சீராக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து கட்டணத்தை பொறுத்தவரை பெரிய நிறுவனங்களின் கட்டணம் சரியான அளவில் உள்ளது. இதுவரை இணையத்தில் எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 11 ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது, அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யார் அதிக கட்டணம் வசூலித்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைகாலங்களில் ஒழுகக்கூடிய பேருந்துகளைக் கணக்கெடுத்து அவற்றைச் சரி செய்திருக்கிறோம். பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 3,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதே போன்று, மற்ற ஊர்களிலும் சிறப்பு பேருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.