தொடரை வெல்வது யாரு...: இந்தியா-ஆஸி., இன்று மோதல்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 11:45


ஐதராபாத்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ‘டுவென்டி-20’ போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில், வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 ‘டுவென்டி&20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. இதில், இந்தியா 4-1 என தொடரை கைப்பற்றி சாதித்தது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையே தற்போது ‘டுவென்டி-20’ தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடந்த முதலாவது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது. இதற்கு பதிலடி தரும் வகையில், கவுகாத்தியில் நடந்த இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது மற்றம் கடைசி போட்டி ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று (இரவு 7 மணி) நடக்க உள்ளது.

கவுகாத்தி போட்டியில் பேட்டிங் சொதப்பலால் இந்தியா தோற்றது. இளம் வேகப்பந்து வீச்சாளர் பெஹ்ரன்டார்ப் இந்திய ணிக்கு தொல்லை கொடுத்தார். இவர் வீசிய முதல் ஓவரில் ரோகித், கோஹ்லி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். தொடர்ந்து அசத்திய  பெஹ்ரன்டார்ப், பாண்டே, தவான் விக்கெட்டை வீழ்த்த இந்தியாவால் பெரிய ஸ்கோரை பதிவு செய்ய முடியாமல் போனது. இந்த முறை ரோகித், தவான் இருவரும் சிறப்பான துவக்கத்தை கொடுப்பார்கள் என நம்பலாம். மணிஷ் பாண்டே தொடர்ந்து சொதப்புவது அணியை பலவீனப்படுத்தி உள்ளது. இவரது இடத்தில் ரெய்னா அல்லது யுவராஜ் சிங் போவ்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இன்றைய போட்டியில் பாண்டே இடத்தில் தினேஷ் கார்த்திக் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது. ஐ.பி.எல்., தொடரில் கார்த்திக் ரன் வேட்டை நடத்தியது நினைவிருக்கும். மற்றபடி மிடில் ஆர்டரில் ஜாதவ், தோனி, பாண்ட்யா போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். துவக்கம் சிறப்பாக அமைந்துவிட்டால் இந்திய அணி பெரிய ஸ்கோரை பதிவு செய்வதில் சிக்கல «தும் இருக்காது.

பந்து வீச்சில் தொடக்கத்தில் புவனேஷ்வர் குமாரும், கடைசி கட்டத்தில் பும்ராவும் அசத்தலாக பந்து வீசுகின்றனர். அதே நேரம் பாண்ட்யா பந்து வீச்சில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. ‘சழலில்’ சாகல் அசத்தினாலும் விக்கெட் வீழ்த்த திணறுகிறார். ஒருநாள் தொ£டரில் அசத்திய குல்தீப் யாதவ், இந்த முறை அதிக ரன்னை விட்டுக் கொடுக்கிறார். கவுகாத்தி போட்டியில் இவர் தனது 4 ஓவரில் 46 ரன் விட்டுக் கொடுத்தார். இவரது இடத்தில் அக்சர் படேல் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது. கேப்டன் கோஹ்லி, பார்டைம் பவுலர் ஜாதவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பீல்டிங்கில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. பேட்டில், பீல்டிங் இரண்டிலும் அதிக கவனம் செலுத்தினால், தொடரை கைப்பறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது.

ஆஸி., அணியைப் பொறுத்தவரை தோள்பட்டை காயம் காரணமாக ஸ்டீஸ் ஸ்மித் விலகிய போதும் பேட்டிங் வலிமையாகவே உள்ளது. வார்னர், ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், டிராவிஸ் ஹெட், பெய்னே, ஸ்டாய்னிஸ் என அதிரடி வீரர்கள் மிரட்டுகின்றனர். இதே போல் ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் போன்றோர் இல்லாத போதும் கூல்டர் நைல் வேகத்தில் அசத்துகிறார். தவிர, இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய பெஹ்ரன்டார்ப், கவுகாத்தி போட்டியில் இந்திய முன்னணி பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து வழியனுப்பி வைத்தார். ‘சுழலில்’ ஜாம்பா சிறப்பாக செயல்படுவது கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. ஸ்டாய்னிஸ், ஹென்ரிக்ஸ். ஹெட் போன்ற சிறந்த பவுலர்கள் அணியில் உள்ளனர். கவுகாத்தி வெற்றி மனரீதியில் வீரர்களை பலப்படுத்தி உள்ளது. ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ‘டுவென்டி-20’ தொடரையாவது கைப்பற்றி வெற்றியுடன்நாடு திரும்ப ஆஸி., விரர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஐதராபாத் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் இந்த போட்டியில் ‘டாஸ’ ஒரு முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ‘டாஸ்’ வெல்லும் அணி முதலில் பந்து வீசும். தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம் போல் இந்த ஆட்டத்தை ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’, டிடி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய காணலாம்.