வங்கதேசத்தை கவனமுடன் எதிர்கொள்வோம்: சோஜெர்ட் மரிஜென்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 11:38


டாக்கா: 

இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத்சிங் தலைமையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ஹாக்கித் தொடரில் விளையாடி வருகிறது. 11ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் ஜப்பானை எதிர் கொண்ட இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்திய அணியின் சுனில் (3வது நிமிடம்), லலித் உபாத்யாய் (22வது நிமிடம்), ராமன்தீப் சிங் (33வது நிமிடம்) மற்றும் ஹர்மன்பிரீத்சிங் (35 மற்றும் 48வது நிமிடங்களில்) அடுத்தடுத்து கோல் அடித்தனர்.

இன்று நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ளவுள்ளது.

இதுகுறித்து பயிற்சியாளர் சோஜெர்ட் மரிஜென் நிருபர்களிடம் பேசும்போது, ‘ ஜப்பானுடன் நடைபெற்ற போட்டியில் அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்துள்ளது. இதைவிட மேம்பட்ட ஆட்டத்தை அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வெளிப்படுத்தும். வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் வங்கதேசம் தோற்றது. ஏறக்குறைய அதேபோன்ற ஒரு திட்டத்தை நாங்களும் செயல்படுத்தினால், நிச்சயம் இந்தத் தொடரில் எங்களால் வெற்றிக் கனியைப் பறிக்க முடியும்’ என்றார்.

பாகிஸ்தானுடனான தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ரஷீல் மஹ்முத் கூறும்போது, ‘பாகிஸ்தானுடன் நாங்கள் மோசமாக விளையாடினோம். எங்கள்  தவறுகளால் அந்த அணி கோல்கள் போட்டது. ஆனாலும், இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் இந்தத் தவறுகள் நடக்காது’ என்று கூறியுள்ளார்.