மத்திய, மாநில அரசுகளை இணைக்கும் பாலமாக கவர்னர்கள் செயல்படணும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவுரை

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 08:40


 புதுடில்லி:

மத்திய, மாநில அரசுகளை இணைக்கும் பாலம் போன்று கவர்னர்கள் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.  

மாநில கவர்னர்கள்,லெப்டினன்ட் கவர்னர்களின் 2 நாள் மாநாடு டில்லி ராஷ்டிரபதி பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டனர். மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

தங்கள் மாநிலங்களில் நிலவும் பல பிரச்னைகள் குறித்து விவாதிக்க கவர்னர்கள்,லெப்டினன்ட் கவர்னர்களுக்கு இந்த மாநாடு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஒரு பாலம் போன்று கவர்னர்கள் செயல்படவேண்டும். அரசியல் சட்டத்தை பாதுகாப்பதுடன் மக்களின் நல்வாழ்வுக்காக கவர்னர்கள் தங்களை அர்ப்பணித்து கொள்ள வேண்டும்.  

நாட்டின் நிர்மாணத்தில் இளைஞர்களை இணைப்பது மிகவும் முக்கியமானது. இளைய தலைமுறையினரின் திறமைகள், நல்ல ஒழுக்கங்கள், இரக்க குணம் ஆகியவற்றின் அடிப்படையிலே தான் நாட்டின் எதிர்காலமே உள்ளது. மாநில அளவில் உயர் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். நாட்டில் உள்ள 69 சதவீத பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டில் உள்ள 94 சதவீத கல்லுாரி,பல்கலைகழக மாணவர்கள் இந்த கல்வி நிலையங்களில் தான் பயில்கின்றனர். அனைத்து குடிமக்கள் குறிப்பாக இளைய தலைமுறையினரின் நலனுக்காக மத்திய அரசும்,மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றுவதற்கு இந்த மாநாடு உதவும். அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைவதன் மூலம் தான் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்.  

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.