சென்னை சவுகார்பேட்டை பகுதியில் தீபாவளி திருடர்களை கண்காணிக்க 52 அதிநவீன கேமராக்கள்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 08:37


சென்னை:

சென்னை பூக்கடைப்பகுதியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருடர்களை கண்காணிக்க 52 அதிநவீன சிசிடிவி கேமராக்களை கமிஷனர் விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்சாலையானது சென்னைப் பட்டினம் என அழைக்கப்பட்ட காலத்தில் இருந்து  மிகப்பழமையான வணிக மையமாக இருந்து வருகிறது. தங்கம், வெள்ளி, துணி வகைகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் விற்பனைக்கு முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. என்.எஸ்.சி.போஸ் சாலையானது சுமார் 1.8 கி.மீ. நீளமுடையது. இங்கு சில்லரை மற்றும் மொத்த விற்பனையாக சுமார் 1,500 கடைகளில் தங்கம் மற்றும் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆகவே இங்கு எப்போதும் ஜனநெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. அதனால் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும்  தீபாவளியை ஒட்டி திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களை ரகசியமாக கண்காணித்து கைது செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் தங்கசாலை தெருக்களில் புதிதாக 52 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டன. கமிஷனர் விஸ்நதான் நேற்று கேமராக்களின் இயக்கத்தை துவங்கி வைத்தார். இந்த கண்காணிப்பு கேமராக்கள் நைனியப்பன் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை சந்திப்பில் உள்ள பூக்கடை போலீஸ் பூத்தில் சிசிடிவி கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு கண்காணிக்கப்படும். இதே போல் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜி.ஏ.ரோடு, எம்.சி. ரோடு ஆகிய பகுதிகளில் 32 கேமராக்கள் நிறுவப்பெற்றுள்ளன. மேலும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை  நெரிசலை ஒழுங்குமுறை படுத்தும் வகையில் 23 ஒலிப்பெருக்கிகள் அமைக்கப்பட்டன. இந்த ஒலிப்பெருக்கிகள் தனித்தனியே பயன்படுத்தும் வசதி கொண்டவை ஆகும்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் 4 மெகா பிக்சல்திறனுடையவை ஆகும். இவை இரவு நேரங்களிலும் வாகனங்கள் மற்றும் முக அமைப்புகளை இன்டெர்நெட்ட மூலம் துள்ளியமாக படம் பிடிக்கும் திறன் படைத்தவையாகும். இதில் பதிவாகும் காட்சிகளை செல்போன், லேப்டாப் மூலம் இணையதள உதவியுடன் எங்கிருந்தாலும்காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.