ஆசிய கோப்பை கால்பந்து போட்டி போராடி நுழைந்தது இந்திய அணி

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 08:29


பெங்களூர்: 

முன்னதாக ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் ராவ்லின் போர்ஜெஸ் 28வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து, 1-0 என்று இந்திய அணியை முன்னிலைப் படுத்தினார். ஆனால், மக்காவ் அணியின் நிக்கோலஸ் டாரோ 37வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 1-1 என்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். இதனால் ஆட்டம் சம நிலையில் நகர்ந்தது. கேப்டன் சுனில் சேத்ரி ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க 2-1 என்று இந்தியா முன்னிலை பெற்றது. தொடர்ந்து இந்திய அணியின் லாம் செங் 70வது நிமிடத்திலும் ஜெஜெ 92வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுனில்சேத்ரி, ‘ஆசிய கோப்பை கால்பந்துக்கு தகுதிபெற வேண்டும் என்ற இலக்கை எட்டியுள்ளோம். ஆனால், இலக்கு முழுமையாகும் வரை தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த முறை ஆசியக்கோப்பை கால்பந்தில், இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும்’ என்றார்.

பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் பேசும்போது, ‘இப்போது நாங்கள் எங்கள் இலக்கை எட்டியுள்ளோம். எங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளோம். அதே நேரத்தில் எங்கள் குழுவில் நாங்கள் முதன்மை இடத்தைப் பிடிக்க விரும்புகிறோம். எனவே, இப்போது ஓய்வெடுக்கவும், கொண்டாட்டத்துக்கும் நேரம் இல்லை. மியான்மருடன் அடுத்தப் போட்டியில் விளையாடவுள்ளதால், அதற்குத் தயாராக வேண்டியுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்ற என் அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் என் கட்டளைகளை சிறப்பாக பின்பற்றி விளையாண்டனர். பயிற்சி நேரத்தில் கடுமையாக உழைத்தார்கள். அதற்கான பலன் இப்போது வீரர்களுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் கால்பந்து அணிகளில் இப்போதுள்ள அணிதான் சிறந்தது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். உழைத்த வீரர்களுக்கான பலன் உண்டு. வீரர்களுக்கும், அணியின் பயிற்சியில் உதவிய சகாக்களுக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம். இந்த அணியால் தேசத்துக்கு பெருமை கிடைத்துள்ளது’ என்றார்.