ம.பி.யில் பெண்கள் கல்விக்கு ரூ.31000 கோடி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 08:25


போபால்:

மத்தியப்பிரதேசத்தில் பெண்கள் கல்விக்கு ரூ.31 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.   

ம.பி.தலைநகர் போபாலில் பெண்கள் கல்வி திருவிழா நேற்று  நடந்தது. இந்த விழாவில் 6ம் வகுப்பில் சேர்ந்த ஏழை குடும்பங்களை சேர்ந்த  மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தை முதல்வர் சிவ்ராஜ் சிங்  சவுகான் வழங்கினார். 65 ஆயிரம் மாணவிகளுக்கு  வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சவுகான் பேசியதாவது:  

மாநிலத்தில் பெண்கள் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக லட்லி  லட்சுமி யோஜனா என்ற திட்டம் கடந்த ஏப்ரல் ஒன்றாம் முதல் செயல்  படுத்தப்படுகிறது. இந்த திட்டம் பெண்கள் கல்விக்கு அடித்தளம் அமைக்கிறது.  சமுதாயத்தையும், நாட்டையும் பலப்படுத்த பெண் கல்வித் திட்டம் உதவுகிறது.  இந்த திட்டம் மூலம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்களும் வலிமை  வாய்ந்தவர்களாக மாற்றப்படுவர்.  

அரசு திட்டத்தின் கீழ் 12ம் வகுப்புதேர்வில் 85 சதவீதத்துக்கு  அதிக மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள், சைக்கிள்,லேப்டாப்  இலவசமாக வழங்கப்படும். அதே போல், போலீஸ் தேர்வில் தகுதி பெற பெண்களுக்கான  உயரம் 158 செ.மீ. என நிர்ணயிக்கப்படும். இதன் மூலம் ஏராளமான பெண்கள்  போலீஸ்வேலையில் சேருவார்கள்.  

லட்லி லட்சுமி யோஜனாவின் கீழ் 6ம் வகுப்பில் சேர்ந்த  மாணவிகளுக்கு ரூ.2 ஆயிரம்,11ம் வகுப்பில் சேர்ந்த மாணவிகளுக்கு ரூ.11  ஆயிரம்,12ம் வகுப்பில் சேர்ந்த மாணவிகளுக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவி தொகை  வழங்கப்படும். அதே போல் 21 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு தலா ரூ.1  லட்சம் வழங்கப்படும்.ஆனால் மாணவிகள் 18 வயதுக்கு முன்பு திருமணம்  செய்திருக்கக்கூடாது.12ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் போன்ற  நிபந்தனைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு இந்த உதவித்  தொகை வழங்கப்படும்.  

மாநிலத்தில் பெண்கள் கல்வியில் மேம்பாடு அடைவதற்கு ரூ.31 ஆயிரம் கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.  

இவ்வாறு சவுகான் பேசினார்.