ராணுவத்தில் நீடிக்கும் சவப்பெட்டி பிரச்னை

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 07:44


புதுடில்லி:

ராணுவத்தில் சவப்பெட்டி பிரச்னை இன்னும் நீடிப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள தவாங் அருகே விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ17 வி5 ரக ஹெலிகாப்டர் கடந்த 6ம் தேதி காலை 6 மணிக்கு விழுந்து நொறுங்கியது. சீன எல்லையை ஒட்டி நடந்த இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 2 ராணுவ வீரர்கள், பைலட்டுகள் உட்பட 7 பேர் பலியாகினர். இவர்களின் உடல்கள் காட்போர்டு அட்டை மற்றும் பாலித்தீன்களால் மூடப்பட்டிருந்தது. ராணுவ வீரர்களின் உடல்களை பாதுகாப்பாக வைப்பதற்கான உடல் பைகளோ, சவப்பெட்டிகளோ இல்லாதது கண்டு, அதிர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டது. இது குறித்து, ஒரு ஆங்கில பத்திரிகை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.  

வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களின் உடல்களை பாதுகாப்பாக வைக்க அல்லது சொந்த ஊருக்கு எடுத்து செல்ல உடல் பைகள் மற்றும் சவப்பெட்டிகள் வாங்கும் ஒப்பந்தம் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி கையெழுத்தானது. கார்கில் போரின் போது, ராணுவ வீரர்கள் தொடர்ந்து பலியானதால், அவர்களுடைய உடல்களை கொண்டு செல்வதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டு, 3 ஆயிரம் உடல் பைகளும், 400 சவப்பெட்டிகளும் சப்ளை செய்ய ‘ஆர்டர்’ கொடுக்கப்பட்டது. அதன்படி, 900 உடல் பைகளும், 150 சவப்பெட்டிகளும் சப்ளை செய்யப்பட்டன. எனினும், இதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இந்த ஒப்பந்தம் 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஊழலில் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டசுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. எனினும், 12 ஆண்டுகளுக்கு பின், ஜார்ஜ் பெர்னாண்டஸ் குற்றமற்றவர் என்ற சான்றை சிபிஐ வழங்கியது.  

 ஒப்பந்த ஆவணத்தில் 18 கிலோ எடை கொண்ட அலுமினிய சவப்பெட்டி தேவை என்று குறிப்பிட்டிருந்ததாகவும், ஆனால், சப்ளை செய்யப்பட்ட சவப்பெட்டியின் எடை 55 கிலோ இருந்ததாகவும் புகார் எழுந்தது. ஆவணத்தில் 18 கிலோ என்பது தவறாக டைப் செய்யப்பட்டு விட்டதாகவும், அமெரிக்க ராணுவத்துக்கு 55 கிலோ சவப்பெட்டிகள்தான் தயார் செய்யப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சவப்பெட்டிகளை சப்ளை செய்வதற்கு இருந்த தடையை நீக்கி பாட்டியாலா கோர்ட் 2017ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. எனினும், இந்த சவப்பெட்டிகள் இன்னும் ராணுவத்துக்கு சப்ளையாகவில்லை. இதனால், ராணுவ வீரர்களின் உடல்கள் காட் போர்டு மற்றும் பாலித்தீன் பைகள் மூலமே மூடப்படும் அவலம் நீடிக்கிறது.