கானாவிடமும் தோல்வி: வெளியேறியது இந்தியா

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 07:18


புதுடில்லி:

உலக கோப்பை இளைஞர் கால்பந்து தொடரில் இந்தியா முதல் சுற்றுடன் வெளியேறியது. டில்லியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கானாவிடம் 0&4 என இந்தியா பரிதாபமாக தோற்றது.

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, மெக்சிகோ, பிரான்ஸ், சிலி உட்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 24 அணிகள் மொத்தம் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு பிரிவிலும் தலா நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன. முதலில் போட்டிகள் லீக் முறையில் நடக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். இதன் பின் அதாவது லீக் சுற்றுகள் முடிவில் ஓவ்வொரு பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகள் ‘நாக்&அவுட்’ சுற்றுக்கு முன்னேறும்.

டில்லி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி கானாவை எதிர்த்து விளையாடியது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடமும் 2வது ஆட்டத்தில் கொலம்பியாவிடமும் வீழ்ந்தது. இந்த நிலையில், இந்திய ணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கானாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. இதனால், வீரர்கள் நெருக்கடியுடன் இருந்தனர். இருந்தும் உள்ளூர் ரசிகர்களின் கரகோஷத்திற்கு இடையே இந்திய வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அலை, அலையாய் தாக்குதல் நடந்த கானா வீரர்கள் திணறினர். ஒருகட்டத்தில் கானா வீரர்கள் எழுச்சியுடன் விளையாடத் தொடங்கினர். இதனால், அடுத்தடுத்து இரண்டு கார்னர் வாய்ப்பை பெற்றனர். இந்த வாய்ப்பை இந்திய கோல்கீப்பர் தீரஜ் தடுத்தார். 43வது நிமிடத்தில் கானா முதல் கோலைல போட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எரிக் அயா பீல்டு கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி முடிவில் கானா 1&0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் கானா வீரர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். மீண்டும் சத்திய எரிக் அயா (52வது நிமிடம்) அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார். இரண்டு கோல் பின்தங்கிய நிலையில், இந்திய வீரர்கள் மனரீதியில் சோர்வடைந்தனர். இதைப் பயன்படுத்தி முன்னேறிய கானா அணிக்கு ரிச்சர்ட் டான்சோ (86வது நிமிடம்), இமானுவேல் டோக்கு (87வது நிமிடம்) கோல் அடித்தனர். இதற்கு கடைசி வரை போராடிய இந்திய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதையடுத்து, கானா 4&0 என இமால் வெற்றி பெற்றது. லீக் சுற்றின் மூன்று போட்டிகளிலும் தோற்றதால் உலக கோப்பை தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது.

மற்ற போட்டிகளில் மாலி அணி 3&1 என நியூசிலாந்தை வீழ்த்தியது. துருக்கிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அசத்திய பராகுவே 3&1 என வென்றது. ‘ஏ’ பரிவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் கொலம்பியா 3&1 என அமெரிக்காவை தோற்கடித்தது.