பாலஸ்தீன அமைப்புகள் இடையே உடன்பாடு : ஹமாஸ் இயக்கம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 03:23

காசா,

பாலஸ்தீனத்தின் இரு முக்கிய இயக்கங்களான ஹமாஸ் மற்றும் ஃபட்டா (Hamas & Fatah) இடையே எகிப்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் இரு முக்கிய பிரிவுகளான ஹமாஸ் மற்றும் ஃபட்டா இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஃபட்டா பிரிவினரிடம் இருந்த காசா பகுதியை ஹமாஸ் பிரிவினர் கைப்பற்றினர். அதன்பின் இரு பிரிவினர் இடையே நடைபெற்ற பல அமைதி பேச்சுவார்த்தைகள் மற்றும் சமாதான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் இரு பிரிவினர் இடையே மத்தியஸ்தராக செயல்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த எகிப்து அரசு முன்வந்தது. எகிப்தின் சினாய் பகுதியின் பாதுகாப்பை உறுதிசெய்ய எகிப்து அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

எகிப்தின் கட்டுபாட்டில் இருக்கும் சினாய் தீபகற்பம் பயங்கரவாத அச்சுறுத்தல் நிறைந்த பாலவனப் பகுதியாகும். அதன் எல்லையில் உள்ள பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் ஃபட்டா பிரிவுகள் இடையே நிலவும் பிரச்சனைகள் பயஙகரவாதிகளுக்கு சாதகமாகக்கூடும் என எகிப்து அரசு அஞ்சுகிறது. அதனால் சினாய் பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்த ஹமாஸ் மற்றும் ஃபட்டா பிரிவுகள் இடையே சமாதானத்தை ஏற்படுத்த எகிப்து மத்தியஸ்தராக இருந்து பேச்சு வாரத்தைகளுக்கு உதவியது.

இந்நிலையில் எகிப்து அரசின் அழைப்பின் பேரில் கடந்த செவ்வாய்கிழமை முதல் ஹமாஸ் மற்றும் ஃபட்டா தலைவர்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில்  இரு பிரிவினர் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹானியாவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக 2008 முதல் மூன்று போர்களில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் இயக்கத்தை அமெரிக்க அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்து கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. பேச்சுவார்த்தையின் முடிவில் காசா மற்றும் எகிப்து இடையே உள்ள ரப்ஃபாஹ் எல்லையை ஃபட்டா பிரிவினரின் ஆதிக்கம் நிறைந்த வெஸ்ட் பேங்க் பாலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருங்கிணைந்த பாலஸ்தீனத்தை உருவாக்க பாலஸ்தீனத்தின் அனைத்து பிரிவுகள் இடையே இரு வாரங்களில் விரிவான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.