தமிழகத்தின் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி வழங்கக் கோரி மத்திய அமைச்சரிடம் தங்கமணி மனு

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 03:20

புதுடில்லி:

தமிழகத்தில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும் என்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக மின்சக்தித்துறை அமைச்சர் தங்கமணி இன்று நேரில் மனு வழங்கினார்.

தமிழக மின்சக்தித்துறை அமைச்சர் தங்கமணி நிலக்கரி கோரிக்கை சம்பந்தமாக டில்லி சென்று மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்தார். அவரிடம் தங்கமணி அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம் டான்ஜெட்கோ சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு தமிழகத்துக்கு 72,000 மெட்ரிக் டன் (அதாவது 20 ரேக்-சரக்கு ரயில் பெட்டி) நிலக்கரி மத்திய அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த சில மாதங்களாக ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு நிலக்கரி தமிழகத்துக்கு கிடைப்பதில்லை. செப்டம்பர் மாதத்தில் தினசரி 9 ரேக் நிலக்கரி மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் 10ம் தேதிவரை தினசரி 9.5 ரேக் நிலக்கரியே வந்து சேர்ந்துள்ளது.

குறைந்த அளவு நிலக்கரி சப்ளையால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 12 அனல் மின் உற்பத்தி யூனிட்டுகளில் 6 முதல் 7 யூனிட்டுகள் இயக்கப்படாத நிலையில் உள்ளன. தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களில் இப்போது 3 தினங்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது. வழக்கமாக 30 நாட்களுக்கான இருப்பு இருக்க வேண்டும் என்பது நியதியாகும். நிலக்கரி கிடைக்காததால் தமிழகத்தில் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.

நிலக்கரி கொள்முதல் நிறுவனங்களிடம் இருந்து வந்து சேர வேண்டிய நிலக்கரி வரவில்லை.

இந்தச்சூழலில், சிங்கரேணி நிலக்கரிச் சுரங்க நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் டன் நிலக்கரி வாங்க டான்ஜெட்கோ புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். இக்கட்டான நிலையில் வேறு வழியின்றி இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, இந்தப் பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு தமிழகத்துக்கு வரவேண்டிய நிலக்கரியை வழங்கச் செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் தினசரி தமிழகத்துக்கு 15 ரேக் நிலக்கரியாவது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவில் நகல் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

எரிசக்தித்துறை இணை அமைச்சர் ஆர்.கே. சிங்கிடம் தமிழக மின்சக்தித்துறை அமைச்சர் தங்கமணி இன்று நேரில் மனு வழங்கினார் அப்போது, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மற்றும் மைத்ரேயன் ராஜ்யசபா எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.