குவால்காம் நிறுவனத்துக்கு தைவான் அரசு 80 கோடி டாலர் அபராதம்

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 02:22

தைபேய்:

அமெரிக்காவைச் சேர்ந்த குவால்காம் நிறுவனத்திற்கு தைவான் அரசு 80 கோடி டாலர் அபராதம் விதித்துள்ளது.

குவால்கம் நிறுவனம் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கான சிப்களை தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம் தைவானில் வர்த்தக விதிமுறைகளை மீறியது கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் விதிகளை மீறி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டதும், உரிமம் பெறாமல் சிப்களை தயாரித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. இதையடுத்து தைவான் அரசு குவால்கம் நிறுவனத்துக்கு 77.4 கோடி டாலர் அபராதம் விதித்துள்ளது.
இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக குவால்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.  
இதுபோன்ற மோசடிகளில் சிக்கி குவால்காம் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல.

ஏற்கனவே, தென்கொரியாவில் இந்நிறுவனத்துக்கு 85 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. சீனாவில் 100 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

குவால்காம் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் தகராறு உள்ளது. தன் நிறுவன சிப் தயாரிப்பு முறையைத்திருடி ஆப்பிள் நிறுவனம் சிப் தயாரித்ததாக குவால்காம் நிறுவனம் குற்றம்சாட்டியது. இழப்பீடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. ஆக, குவால்கம் எந்தெந்த நாடுகளில் எல்லாம் மோசடி புகாரில் சிக்குகிறதோ அங்கெல்லாம் அந்நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிள் நிறுவனமும் களம் இறங்குகிறது.