5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது

பதிவு செய்த நாள் : 13 அக்டோபர் 2017 02:10

ராமேஸ்வரம்

தமிழக மீனவர்கள் 5 பேர் இலங்கை எல்லைப் பகுதியான நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததால், அவர்கள் ஐவரையும் இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்தனர்.

இலங்கை கடற்படை அதிகாரிகள் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதாக குற்றஞ்சாட்டி தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்த வண்ணம் உள்ளனர். இன்று நெடுந்தீவு அருகே இலங்கை கடல்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கூறி 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து, இலங்கையில் உள்ள மன்னார் கடற்படை முகாமிற்கு எடுத்துச்சென்றதாக மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் தெரிவித்தார்.
இதேபோல், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்

மீன் பிடிக்காமலேயே, தங்கள் 50 படகுகளுடன் கரைக்கு திரும்பியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் சங்க தலைவர் எஸ்.எமிரெட் தெரிவித்தார். கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி நாகபட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.